டிசம்பர் -6 இந்திய மக்கள் ஒற்றுமை இடிக்கப்பட்ட நாள்


டிசம்பர் 6, 1992 ஞாயிற்றுக்கிழமை.
நாடே அதிர்ச்சியில் பேசிக் கொண்டது... “என்னது இடிச்சுட்டாங்களா... நிஜமாவா”. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டனர்.
ஏதோ ஒரு சிறிய பகுதியை அல்லது மிகப்பெரிய கட்டிடத்தின் ஒரு பகுதியைத்தான் இடித்திருப்பார்கள் என்று அந்த தருணத்தில் புரிந்துகொண்டது தவறு; முழு மொத்தமும் இடித்துத் தகர்த்துத் தரை மட்டமாக்கப்பட்டு விட்டது என்பதை, பத்திரிகை உலகின் நண்பர்கள் சிலரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டபோது அதிர்ச்சியின் பரிமாணம் மேலும் அதிகரித்திருந்தது. எத்தனை பெரிய கூட்டம் திரட்டப்பட்டிருக்க வேண்டும், எத்தனை பேர் துணிந்து இந்த வேலையில் இறங்கி இருக்க வேண்டும், எப்படி ஒரு நாளின் விடியலில் தொடங்கி அந்தி கருக்குமுன் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வலுவான ஒரு கட்டிடத் தொகுப்பை இப்படி அனாயசமாக இடித்து வீழ்த்தி இருக்க முடியும் என்ற கேள்வியும், இனி அடுத்தடுத்த நடப்புகள் தேசத்தை எங்கே கொண்டுவிடும் என்ற பெருங்கவலையும் ஒருசேர முன்னெழுந்தது.
மறுநாள் பத்திரிகையில் பார்க்கையில் எத்தனை பெரிய அராஜகத்தை மதவாத, வகுப்புவாத சக்திகள் இழைக்க முடியும் என்பதை அந்த நாளின் நிகழ்வுகள் சாட்சியமாக்கி இருந்தன. முரளி மனோகர் ஜோஷியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சாமியாரிணி உமா பாரதி குதித்துக் கொண்டாடிய படங்களும், காவிக் கொடியேந்திய இளைஞர் பட்டாளம் இடித்து நொறுக்கிக் கொண்டிருந்த படங்களும் ...... மிகத் தவறான வழிகாட்டல், ஆத்திரமூட்டல், வெறியேற்றுதலுக்கு எல்லாம் இலக்காகி மசூதியின் மீது ஏறி நடத்திக் கொண்டிருந்தது, கரசேவையா, கடப்பாறை சேவையா என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தன.
பின்னர் ஒரு பத்திரிகை நேர்காணலில், பஜ்ரங் தளத்தின் தலைவர் வினய் கத்தியார், வேறு யாராவது இப்படி ஆறரை மணி நேரத்திற்குள் இத்தனை பெரிய கட்டிடத்தை இடித்துக் காட்டட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டார். அதற்காகத் தங்களது குழு ஒன்று சிரமமிகுந்த பயிற்சியைச் சில காலம் எடுத்துக்கொண்டது என்றும் சொன்னார். அதற்குள் மையப் பகுதியை இடித்து அந்த இடிபாடுகளோடே கீழே விழுந்து இறந்துபோனவர்கள் எங்களது சிவ சேனா இயக்கத்தவர், நாங்கள்தான் மசூதியை இடித்த பெருமைக்குரியவர்கள் என்று தாக்கரே வகையறாக்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.
தேசத்தின் வீதிகளில் அச்சத்தையும், அவநம்பிக்கையையும், பரஸ்பர வெறுப்பு நெருப்பையும் மூட்டிவிட்டிருந்தது சங்பரிவாரம்.
அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகத் தான், நவம்பர் மாத இறுதியில் தலைநகர் புது தில்லியை, பெருந்திரள் தொழிலாளர் பேரணி ஒன்று உலுக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. தொழிலாளர் கோரிக்கைகளுக்காகவும், புதிய வேலை வாய்ப்புகளுக்காகவும் நாடு தழுவிய அளவில் வந்து கலந்துகொண்டிருந்த அந்த முகங்களில் ஆவேசம் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. சாதி, மத வேறுபாடுகள் குறித்த எந்த சிந்தனைகளும் இல்லாத காட்டாற்று வெள்ளமாகத் திரண்டிருந்த கூட்டம் அது.               
                   
 அந்த முழக்கத்தில் வர்க்க அரசியல் மட்டுமே தெறித்துக் கொண்டிருந்தது.
1991ல் நரசிம்மராவ் அறிமுகப்படுத்தி இருந்த புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான இடதுசாரி தொழிற்சங்க முன்முயற்சியின் கீழ் அனைத்துத் துறை தொழிலாளர்கள், ஊழியர்கள் திரண்டு வந்த போராட்டக் கனலில், உலக வங்கி திணித்த தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற மும்முனைத் தாக்குதலுக்கு எதிரான பொறி பறந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்த கட்ட போராட்டங்களுக்குத் தொழிலாளர் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும், அறிவூட்டம் பெற்றுத் தெளிந்து முழங்கிப் புறப்பட்டு முறியடித்து முன்னேறத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவுமான தருணமாக அது வெளிப்பட்டது.
மத அடிப்படைவாதிகளது கடப்பாறை மசூதியை மட்டுமல்ல, இப்படி உருக்குப் போல கட்டப்பட்டிருந்த வர்க்க ஒற்றுமையின் மீதும் குறி வைத்திருந்தது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களிடையே மதரீதியான பிளவை, பிரிவை ஊதி ஊதி வளர்த்துப் பெரிதாக்கி அந்தக் கலகத்தில் பெருகியோடும் குருதியை ருசிக்க ஏங்கிக் கொண்டிருந்த காவிப் படைகள், பின்னர் எத்தனை எத்தனை அதிர்ச்சிகரமான தாக்குதல்களை நடத்தத் துணிந்தனர்!
ஹிரோஷிமா, நாகசாகி மீது குண்டு வீசிய பால் டிப்பெட்ஸ், தனது 92ம் வயதில் இறக்கிறவரை, அதை ஒரு குற்றமாகவே கருதவில்லை. அந்த அளவுக்கு ஏகாதிபத்தியம் தங்களது ஏவலாட்களை மூளைச் சலவை செய்து பயன்படுத்துகிறது.
                                        பாசிச சக்திகளும் அப்படித்தான். மாட்டுக் கறிக்கு எதிரான வெறியை சங் பரிவாரம் அப்படித்தான் தூண்டி, கொலைவெறி கொண்டு தாக்கச் செய்கிறது. தங்களுக்கு எதிரான தத்துவத்தைப் பேசுபவர்களை, தங்களது இலட்சியத்திற்குக் குறுக்கே நிற்கக் கூடும் என்று கருதுவோரை, மக்கள் ஒற்றுமைக்காக நிற்போரை இப்படித்தான் தாக்கி அழிக்க படைகளை அமைத்துக் கொண்டே இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் தாங்கள் நடத்தும் பள்ளிகளில், காந்தி ஒரு தேசத் துரோகி என்று போதிக்கிறது. , ‘காந்தியைச் சுட்டுக் கொன்றது ஒரு தேச பக்தச் செயல், நாதுராம் கோட்சே ஒரு தியாகி’ என்று நினைவு அடுக்குகளில் பதிக்கிறது. கோட்சேவுக்கு சிலை வைப்போம் என்ற சங் பரிவாரப் பேச்சுக்கள் மிக சாதாரணமாக மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படுகின்றன. அதைக் கேள்விக்கு உட்படுத்தியது. கோவிந்த் பன்சாரே அவர்கள் கோலாப்பூரில் கொல்லப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று.
                 
         “இது இந்து நாடு என்று அழைப்பதில் என்ன தவறு, வேற்று மதங்களுக்கு இங்கே என்ன வேலை” என்று மிக எளிய மனிதர்கள் மனத்திலும் காவிப் பரிவாரம் நஞ்சு ஊட்டுகிறது.
அடையாள பூர்வ கரசேவை என்பதற்குத் தாம் உத்திரவாதம் தருவதாக, உச்சநீதி மன்றத்தின்முன் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்தார். உத்தர பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் தங்கள் ஆட்சியில் தங்களை மீறி யாரும் எந்த விதிமீறலிலும் ஈடுபட மாட்டார்கள் என்று வாக்களித்தார். மிகப்பெரிய பாதுகாப்பு வளையத்தை அமைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சவாண் அடித்துப் பேசினார். தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கரசேவைக்கு ஆதரவாக ஒலித்த ஒரே முதல்வர் குரல், ஜெயலலிதாவுடையது. எந்த அதிர்ச்சி நிகழ்வும் அயோத்தியில் நடக்காது என்று அந்தக் கூட்டத்திலும் ஒப்புதல் அளித்தார் நரசிம்மராவ்.
டிசம்பர் 7, 1992 அன்று தி இந்து நாளேட்டில் ஓவியர் கேசவ் வரைந்த கேலிச்சித்திரம், அடையாளப் பூர்வ கரசேவை என்று பொய்சொல்லி, மசூதியைத் தகர்த்துக் கொண்டிருந்தோரையும், பாதுகாப்பு தருகிறோம் என்று சொல்லி அடையாளபூர்வ பாதுகாப்பு சேவை செய்து அநியாயத்தை அனுமதித்துவிட்ட ராவ், சவாண் இருவரையும் காட்சிப்படுத்தி இருந்தது.
எளிய இஸ்லாமிய பெரியவர் ஒருவர், ஒரு டிசம்பர் 6 அன்று ரயில்வே நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்த அவமானத்தோடு தம்மெதிரே வந்தமர்ந்த பரிதாப கணத்தை, எழுத்தாளர்
ச.தமிழ்ச்செல்வன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அயோத்தி குற்றக் கொடுஞ்செயலுக்குப் பொறுப்பானவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். குஜராத் மாநிலத்தில் இரண்டாயிரத்திற்கு அதிகமான அப்பாவிகளை பலி கொண்ட சூரர்கள் பெருமையோடு பல பொறுப்புகளை நாடு முழுவதும் வகித்துக் கொண்டிருக்கின்றனர். சாத்திரங்கள் பிணம் தின்று கொண்டிருக்கின்றன.
டிசம்பர் 6, பாபாசாகேப் அம்பேத்கரது நினைவு நாள். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மட்டுமல்ல, சாதி ஒழிப்புக்கான குரலெழுப்பும் யாவருக்குமான மரியாதைக்குரிய மனிதரது நினைவு நாளைத் தான், மத அடிப்படைவாதிகள், சாதியம் தொடர வேண்டும் என்ற தத்துவத்தைக் கொண்டாடுபவர்கள் களவு செய்து, மசூதியை இடித்த நாளாக அதை நிலைபெறச் செய்யும் குறுக்குப் புத்தியோடு செயல்பட்டுள்ளனர்.
ஆனால், மக்கள் ஒற்றுமையை இடிக்கும் அடிப்படைவாதிகளுக்கு எதிரான சூளுரைக்கும் நாளாகவும், தீண்டாமை ஒழிப்பு-சாதி மறுப்பு-சாதி ஒழிப்புக்கான தலைமுறையை வளர்த்தெடுக்க உறுதி ஏற்கும் நாளாகவும் டிசம்பர் 6 திகழும்.

நன்றி
எஸ்.வி.வேணுகோபாலன்
தீக்கதீர் நாளிதழ்கருத்துகள்