புளூவேல் வெறும் விளையாட்டா, விபரீத விதையா?


புளூவேல்’ என்ற இணைய விளையாட்டு, உலக அளவில் இளைய தலைமுறையின் உயிரை குடிக்கும் விளையாட்டாக மாறி வருகிறது. இந்த விளையாட்டின் இறுதிக் கட்டம், தற்கொலைக்கு தூண்டுவதே நோக்கமாக உள்ளது. ‘புளூ வேல்’ என்ற இணைய விளையாட்டால் பாதிக்கப்படுவதில் ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லை.இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான இணைய விளையாட்டுக்கள், இணைய செயலிகள் நமது ரகசிய தரவுகளையும் புகைப்படங்களையும் நமக்கு தெரியாமலே திருடிச்சென்றனர். தற்போது ஒரு படி மேலே சென்று மனித உயிர்களுடன் விளையாடுகின்றனர். உலகின் எங்கோ ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் மெல்ல மெல்ல இந்த விளையாட்டு இந்தியாவுக்குள் ஊடுருவி தற்போது தமிழ்நாட்டிற்குள்ளும் புகுந்துவிட்டது.
மனித பயன்பாட்டிலுள்ள அசவுகரியங்களை களைவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் நம்மை அடிமைப்படுத்தும் வேலையை முனைப்புடன் செய்கிறது. ‘மெய்நிகர்’ (எசைவரயட) என்ற ஒரு வார்த்தை நிஜ உலகில் இருக்கும் நல்லது சிலவற்றையும் அழித்து விட்டன. ‘புளூ வேல்’ சவால் இந்த வார்த்தையைக் கேட்டதும் என்ன என்பதை அறியும் ஆர்வம் இளம் வயதினருக்கு ஏற்படும். இதன் மூலம் தொழில்நுட்ப அடிமை மோகத்தை உருவாக்கி அதில் உட்புகுவோரின் உயிரையும் பறிப்பதே புளூ வேல் இணைய விளையாட்டாகும்.

‘புளூ வேல்’ என்றால் என்ன என்பதனை முதலில் தெரிந்துகொள்வோம்:

தன் வாழ்நாள் இறுதியில் கரையில் ஒதுங்கி உயிர் விடும் “நீல திமிங்கிலத்தின்” பெயர்தான் இந்த விளையாட்டிற்குச் சூட்டப் பட்டிருக்கிறது. 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்தான் அதிகம் இந்த விளையாட்டிற்கு அடிமையாகின்றனர். 50 நாட்களுக்கு மேல் நீடிக்கும் இந்த விளையாட்டின் சவாலில், ஒவ்வொரு நாளும் விதவிதமான கட்டளையை (டாஸ்கை) பங்கேற்பாளர் கள் நடத்தி முடிக்க வேண்டும்.இந்த விளையாட்டில் அடையாளம் தெரியாத அந்த நபர் அறிவுறுத்தியபடி திகில் படத்தை இருட்டு அறையில் பார்ப்பது, இசைக் கேட்பது, உடலில் புளூ வேல் திமிங் கலத்தின் உருவத்தை ஆயுதங்களை கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட வரைதலும் விதிமுறைகள் அடங்கும். விளையாட்டின் முடிவில், வித்தியாசமான முறையில் தற்கொலை செய்துகொண்டு அதைப் பதிவும் செய்யவேண்டும். இதற்கிடையில், இந்த விளையாட்டில்ஈடுபடும் நபர்களின் கணினி, செல்போன்களிலிருந்து தனிப்பட்ட தகவல்களைத் திருடிஅதைக் கொண்டு அச்சுறுத்துவதும் மிரட்டுவதும் அந்த மர்ம நபரின் வேலையாகும்.

விளையாட்டை பாதியில் நிறுத்த நினைத்தால் இந்த மிரட்டலுக்கு பயந்து அந்த விளையாட்டை தொடரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.அபாயகரமான இந்த புளூ வேல் விளையாட்டை உருவாக்கியவர் ரஷ்ய நாட்டைச் சார்ந்த பிலிப்ஸ். இவரைக் கடந்த ஆண்டு ரஷ்யா காவல்துறை கைது செய்தது. ஆனாலும் இந்த விளையாட்டு அடையாளம் தெரியாத நபர்களால் இன்னும் விளையா டப்பட்டுக் கொண்டிருக்கிறது.2015-2016 ஆம் ஆண்டு மட்டும் இந்த விபரீத இணைய விளையாட்டு ரஷ்யாவில் மட்டும் 130 மாணவர்களின் உயிரை பறித்தது. உலகம் முழுவதும் சுமார் 300 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பை, மத்தியப் பிரதேசம், கேரளாவை தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரியிலும் புளூ வேல் விளையாட்டின் விபரீதம் தொடங்கியுள்ளது.

மும்பையில் 14 வயது சிறுவன் மான்பிரீத் சிங்சகானி கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி ஏழாவது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான். அவனது இந்த முடிவிற்கு இந்த விளையாட்டுதான் காரணம் என்பது காவல் துறையின் விசாரணையும் உறுதி செய்தது. மாடியில் இருந்து குதிப்பதற்கு முன்னர் அந்தச் சிறுவன் தான் தற்கொலை செய்து கொள்ளும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளான்.அடுத்ததாக மேற்கு வங்க மாநிலம் மித்னாபூரில் அங்கன் தே என்கிற 10 ஆம் வகுப்பு மாணவன் குளியலறையில் தூக்கில் தொங்கினான். இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் இந்தூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் 7ஆம் வகுப்பு மாணவன் தேஜோ பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதிக்க முயற்சித்தபோது ஆசிரியரால் காப்பாற்றப்பட்டான்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மனோஜ் (19), கண்ணனூரில் சவாந்த் (19), ஆஷிக் (20) என மூன்று மாணவர்கள் பலியானார்கள். இவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.மனோஜ் தற்கொலை செய்துகொண்ட அன்றைய தினமே இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அம் மாநில முதல்வர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தில் இது வீடியோ கேம் அல்ல என்றும் எங்கிருந்தோ ஒருவர் பிறப்பிக்கும் கட்டளைகளை நிறைவேற்றுவதும், இறுதியில் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் இந்த விளையாட்டுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதனையடுத்து ஆகஸ்ட் 21ம் தேதி மத்திய அரசின் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விளையாட்டைத் தடை செய்ய உத்தரவிட்டது. இந்தத் தற்கொலைக்கு சவால் விடும் விளையாட்டை கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் இதற்கான (டுiமே) லிங்குகளை நீக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் அது வெறும் உத்தரவாக மட்டுமே போனது அதனைத் தடுக்க எந்த நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கவில்லை.மத்திய அரசின் அலட்சியத்தால் மதுரை விளாச்சேரி மொட்ட மலை விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இளைஞர்களை அழிக்கும் இந்த விளையாட்டைத் தடை செய்ய வேண்டும், எனது மகன் மட்டுமல்ல 75 மாணவர்கள் விளையாடி வருகின்றனர். அவர்களைக் காப்பாற்றறுங்கள் என்று விக்னேஷின் தாய் வனிதாகதறியது ஆட்சியாளர்களுக்கு கேட்க வில்லை என்பது வேதனையளிக்கிறது.இந்த விபரீத விளையாட்டும் அதனால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க தமிழகத்தில் உள்ள பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். பெற்றோர்கள் நமக்குக் கிடைத்த வசதி, வாய்ப்புகள் தன் பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போய் விடக் கூடாது என்று தொழில்நுட்பக் கருவி வசதிகளை ஏற்படுத்திவிடுகின்றனர் அதன் விளைவு என்னவென்று அறிந்திராமலும் நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். உங்கள் பிள்ளைகள் சரியான வழியில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டிய கடமையும் உங்களுக்கு உள்ளது. அரசும் தம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையுள்ளது என்பதனை உணரவேண்டும்.

-இரா.பிரேம்குமார்
நன்றி தீக்கதீர்

கருத்துகள்