மனிதனைக் கடித்து மாட்டைக் காப்பாற்றும் மோடி

மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவப்பதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாட்டின் மதச்சார்பற்ற முகத்தை மாற்ற
 மோடி அரசு முயற்சிக்கிறது!


மதச் சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம், நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் எல்லாவற்றையும் மறுக்கும் விதத்தில் மத்திய அரசே இப்படியொரு அறிவிக்கையை வெளியிட்டு சிறுபான்மையின மக்கள், விவசாயிகள், குறிப்பாக ஏழை விவசாயிகள் போன்றோரின் உரிமைகளைப் பறித்திருப்பது நாட்டின் மதச்சார்பற்ற முகத்தை மாற்றும் முயற்சியாகவே இருக்கிறது.
மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் இன்னொரு நடவடிக்கையாகவே இந்த அறிவிக்கையைக் கருத வேண்டியதிருக்கிறது. எனவே, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சமான மதச்சார்பற்ற தன்மையை அடியோடு அசைத்துப் பார்க்கும் நடவடிக்கைகளில் மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் விதமாக நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்காக விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று

2. உடைத்து நொறுக்கப்படும் அரசியலமைப்புச் சட்டம்!
 \மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மூலம், மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ள இந்திய அரசியல் அமைப்புச் சட்ட பாதுகாப்பு வளையம் உடைத்து நொறுக்கப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார். ‘என்ன சாப்பிட வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்ன எழுத வேண்டும்? எப்படி சிந்திக்க வேண்டும் என எல்லாவற்றையும் ‘இந்துத்துவா’ சக்திகளே தீர்மானிக்கும் ஏதேச் சதிகார உச்சத்திற்கு மோடி அரசு சென்றிருக்கிறது’ என்று விமர்சித்துள்ள அவர், அரசின் நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறும், சிபிஐ கட்சி அமைப்புகளையும், ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

3 அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பே மாட்டிறைச்சிக்கான தடை!
 மாடு, ஒட்டகம் விற்கக்கூடாது என்று தடைவிதித்திருப்பதன் மூலம் மத்திய பாஜக அரசானது, இஸ்லாமியர்களின் வணிகத்தை கூறிவைத்திருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும் மாட்டிறைச்சிக்கான தடை ஒரு கலாச்சார தாக்குதல் மட்டுமின்றி, சிறுபான்மையினரின் பொருளாதா ரத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாக இருக்கிறது. ஆகவே இதில் அப்பட்டமான ஒரு முஸ்லிம் வெறுப்பு வெளிப்படுகிறது. இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வெளிப்படையான ஒரு செயல் திட்டம். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது; மத்திய அரசு இந்த ஆணையை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


4.மாட்டு வளர்ச்சிக்கு உணவே சாப்பிடக் கூடாதென்றும் கூறுவார்கள்
 மாட்டு இறைச்சிக்குத் தடை விதித்துள்ள மோடி அரசை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடுமையாக சாடியுள்ளார். ‘நாட்டு மக்கள் எதை சாப்பிட வேண்டும், எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பதில் எல்லாம் மத்திய அரசு தலையிட முடியாது. இது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும். இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களிலும், கேரளாவிலும் மாட்டு இறைச்சியே பிரதான உணவாக உள்ளது. இப்போது மாட்டிறைச்சிக்கு தடை விதித்தவர்கள் அடுத்து ஆடு, கோழி, மீன் போன்றவைகளையும் சாப்பிடக் கூடாது என அறிவிக்கலாம். நாட்டு மக்கள் சாப்பிடாமல் பட்டினியோடு இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் என்று கூறவும் வாய்ப்பு உள்ளது. பாஜக அரசின் இந்த சர்வாதிகார அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்று அவர் கூறியுள்ளார்.


5.மனிதனைக் கடித்து மாட்டைக் காப்பாற்றும் மோடி
மாட்டிறைச்சி உணவுக்குத் தடை விதித்துள்ள மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து ஜூன் 1-ம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். ‘மாட்டைக் கடித்து, ஆட்டைக் கடித்து, கடைசியில் மனிதனை கடித்தது என்ற ஒரு பழமொழி உண்டு;
ஆனால் இப்பொழுது சற்று வித்தியாசப்படுத்தி மனிதனை கடித்து மாட்டைக் காப்பாற்றும் தலைகீழ் நிலைக்கு மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு நாட்டைக் கொண்டு செல்கிறது’ என்று கூறியுள்ள வீரமணி, ‘மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ள, மனித உரிமையில் ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரும் ஓர் அணியில் இணைந்து நின்று மத்திய அரசின் காட்டு தர்பாரை முறியடிக்க வர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.

6.உணவைத் தீர்மானிக்க மோடியும் அமித்ஷாவும் யார்?
 இஸ்லாமியர்களும், சாதாரண மக்களும் சாப்பிடும் உணவு மாட்டிறைச்சி. அதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார். ‘யார் என்ன சாப்பிட வேண்டும் என்று அவரவர்தான் முடிவெடுக்க வேண்டும்; மோடியும் அமித்ஷாவும் முடிவு செய்ய முடியாது; தேவையில்லாத விஷயத்தில் மத்திய அரசு தலையிடுகிறது; இதுபோன்ற நடவடிக்கையால் மோடி அரசு மக்களின் செல்வாக்கை இழக்கும்; தேர்தல் எப்போது வரும் என்று மக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்; மோடி விரைவில் அகற்றப்படுவார்’ என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

7.மோடி மிகப்பெரும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியது வரும்


இந்தியாவில் பல மொழி பேசக்கூடிய மக்களும், பல மதத்தை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள்; ஒவ்வொறு மதத்தை சார்ந்தவர்களுக்கும் தனித்தனி பண்பாடு, கலாச்சாரம், உணவு முறைகளும் உண்டு. அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளின் இறைச்சி உண்ணுவதற்கும், சந்தை விற்பனைக்கும், வாங்குவதற்கும், தடை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது; இது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கக்கூடிய செயலாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மாட்டிறைச்சிக்கான உடனடித் தடை என்பது மிகப்பெரிய சவாலையும், எதிர்ப்புகளையும் கொண்டுவரும் என்பதால் மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள விஜயகாந்த், ஜெயலலிதா ஆட்சியில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதை நினைவுபடுத்தியுள்ளார்.

8சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கை


இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாளை தொடங்க உள்ள நிலையில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது. இது சிறுபான்மை இன மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என அதிமுக செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மத்திய அரசு மனிதனை விட்டு விட்டு மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. யார் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது அவர்களது தனிப்பட்ட உரிமை. அந்த விஷயத்தில் அரசு அதிகாரம் செலுத்த முடியாது. எனவே மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்