மதுவின் பயணமும்... அதன் பின்னான அரசியலும்ஓரு மூட்ட அரிசியை  ஒருகையாள தூக்கி போட்ட மனுசன் ... இப்ப நடக்க மாட்டாமா இருக்காறே? எல்லாம் குடி...குடிச்சு உடம்பும் போச்சு குடும்பமும் போச்சு..  எனது மாமா ஒருவரை பற்றி சிறுவயதில் பேச கேட்டிருக்கிறேன். கிராமத்தில் அப்போது குடிப்பவர்கள்  விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருப்பார்கள்.( இப்போது தலைகீழ் குடிக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்) அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் தப்பித்தவறி அவர்களோடு பேசினால் அடி விழுகும்.குடிகாரப்பயலோட  உனக்கென்ன பேச்சு என்று திட்டுவார்கள். குடிப்பவர்களும் ... ஊர்பெரியவர்கள்,படித்து பெரிய உத்யோகத்தில் இருப்பவர்களை பார்த்தால் மிகப்பெரிய குற்றம் செய்தவர்களை போல தலைகுனிந்து படியே சென்றுவிடுவார்கள்.

                              எனது பாட்டி ஊரில் மற்றொரு மாமா  ஒருவர் சாராய வியாபாரி.  அப்போது சாராயம் என்பது சர்பத் பாட்டிலில் குடிதண்ணீரை (H2o- வேறுவழியில்லை குடிநீரை இப்படி சொன்னால்தான்  சரியாக இருக்கும்)போலவே இருக்கும். ஒரு திருமண  விஷமாக பேச சென்ற போது "அண்ணே " என்ற சத்தம் கேட்கும்.டீ கிளாஸில்  உற்றி கொடுத்துவிட்டு வருவார் . இதில் என்ன வேடிக்கை என்றால் எனது மாமா குடிக்கமாட்டார். இவர் மட்டுமல்ல டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் எனது நண்பர்கள் சிலரும் குடிப்பதில்லை.இந்த மேஷிக் எப்படி நிகழ்கிறது என்பது தான் தெரியவில்லை.

கள்ளச்சாராயமும்... சீமைச்சரக்குகளும்

                    மது விலக்கு இருந்த சில ஆண்டுகளில் கள்ளச்சாராய சாவுகள் ,கண் பார்வை பறிபோனவர்களின் துயரச் செய்திகள்  ஊடகங்களில் அடிக்கடி வரத்தொடங்கின.கள்ளச்சாராயம் எப்படி காய்ச்சுகிறார்கள் என்பதை பற்றிய குறிப்புகளை பலர் சொல்வார்கள் அழுகுன வாழைப்பழம்,டார்ச்லைட்டுகளுக்கு பயன்படும் பேட்டரிகட்டைகள்.புளியமரபட்டை இன்னும் பல பொருட்களை  பலஅடுக்கு பானைகளில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து  அதில் வருகிற நீராவியை பிடித்து குளிரச்செய்து தயாரவது தான் கள்ளச்சாராயம்.
                  கள்ளச்சாராய சாவுகள் அதிகரிக்க துவங்கியதால் மீண்டும் சாராயக்கடைகள் திறக்கப்பட்டன. குடிகாரர்களின் வசதிக்காக பாக்கெட்களில் சாராயம் விற்கத்துவங்கினார்கள்.
           அப்போதெல்லாம் ரம்,விஸ்கி,பீர், போன்றவை கிடைக்காது. இவையெல்லாம் சீமை சரக்கு என்ற பெயரில் வெளிநாட்டு விலை உயர்ந்த தரமானவை என்றுபார்க்கப்பட்டன. ராணுவத்தில் வேலை பார்ப்பவர்கள் விடுமுறையில் ஊருக்கு வரும் போது கொண்டுவந்து நண்பர்களுக்கு ரகசியமாக கொடுப்பார்கள்.

ஒயின்சாப் வருகையும்..குடி பரவலும்

                ஒயின் சாப்கள் வரத்துவங்கிய  பிறகே மது விற்பனையும்,குடிப்பதும் சமூகத்தில் பலமாறுதல்களை ஏற்படுத்தியது. ஒயின்சாப் வைப்பவர் நிச்சயமாக அப்போதைய ஆளும் கட்சி பிரமுகராக இருப்பார். அடியாள் பலத்தோடு அந்த பகுதியின் ரவுடியாக இப்பார்.ஒயின்சாப் ஓனர் என்பவர்  கொஞ்சம் பயத்தையும் ,அவர் பெரிய அளு என்ற பிம்பத்தை  உருவாக்கி வைத்திருப்பார்கள்.   ஒயின்சாப் எலம் எடுப்பதில் தகறாறுகள் எற்பட்டு உயிர்பலிகளை ஏற்படுத்த கூடிய கலவரங்களை உருவாக்கும்.
                   ஒயின் சாப்கள் வந்த பிறகே குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. சவகாசமாக ,அறஅமர பேசிக்கொண்டே குடிக்க இருக்கை வசதி,குடிக்கும் போது இடையில் கொறிக்க சிறுதீணிகள் அங்கேயே கிடைக்கும்.பீர், ஒயின் குடிக்கிறது தப்பில்லை... அது உடம்புக்கு நல்லது என்ற பேச்சுகள் வரத்தொடங்கின.
எனது உறவு பெண் ஓருவருக்கு பிரவசவத்திற்கு பின் உடலை தேற்ற பீர்  வாங்கி கொடுப்பதை பார்த்திருக்கிறேன்.பீர் சாப்பிட்டால் நிறை உணவு சாப்பிடலாம் உடல் தேறும் என்பது நம்பிக்கை.
                   சாவு வீட்டில் மேளம் அடிப்பவர்கள், தொழிற்சாலைகளில் உடலுலைப்பு தொழிலாளர்கள் விவசாய கூலிகள்  உடல் வலி மற்றும் மனச்சோர்வுக்காக குடிக்க தொடங்கனார்கள்.
இப்படி மது என்பது கொஞ்சமாக சாவு வீட்டிலிருந்து காதுகுத்து,கல்யாணவீடு, பெர்த்டே பார்டி என சகலத்திலும் புகுந்து விளையாடத்துவங்கியது.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் இளைஞன்(இப்போது இளைஞிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்) குறைந்த பட்சம் பீராவது குடிக்கவேண்டும் இல்லை என்றால் நண்பர்கள் வட்டாரத்தில் கிண்டல் ,கேலியும் துவங்கும்,"டே நீ ஆம்பளயே இல்ல என்பர்கள்". குடிபதற்கும் ஆண்மைக்கும் என்ன சம்பந்தம் ?உண்மையில் அதிகமாக குடித்தால் ஆண்மை பறிபோகும் .
                 தற்போதைய குடிகார்களுக்கு மிகபெரிய பகுமானம் என்னவென்றால் எவ்வளவு குடிசாலும் நான் ஸ்டேடியா இப்பேன் என்பார்கள். பிறகு எதுக்கு குடிக்கிறார்கள் அவர்களைகேட்க வேண்டிய கேள்வி? ஜேம்ஸ்பாணட் படங்களில் மிகச்சிறிய கோப்பைகளில் கொஞ்சமாக உற்றி கொஞ்சம்,கொஞ்சமாக குடிப்பார்கள்.இதிலும் நம்மவர்களுக்கு தனி ஸ்டெயில் உண்டு ஆப்பை ஒரே மடக்கில் குடித்துவிட்டு வேட்டி அவிழ்ந்து தெருகோடியில் விழுந்து கிடப்பார்கள்.
            ஒயின்சாப்களின்  குடியை அதிகமாக்கும் பணியை டாஸ்மாக்  இன்னும் சிறப்பாக செய்யதுவங்கியது. பட்டாதாரி இளைஞர்களை மதுவிற்பனைக்கு  அரசு பயன்படுத்த துவங்கியது. கல்வி ,சுகாதாரம் போன்ற மக்கள் நல பணிகளை தனியாருக்கும் மது விற்பனையை அரசும் ஏற்று நடத்தியது. விற்பனைக்கான இலக்கை வைத்து டாஸ்மாக் ஒட்டுமொத்த தமிழகத்தையும் மதுவின் பிடியில் வீழ்த்தி தள்ளாட வைத்திருக்கிறது.

மதுவும் ... சினிமாவும்                     மதுவை குடும்பங்களுக்கு கொண்டு போய் சேர்த்ததில் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்கு  உண்டு. பழைய திரைப்படங்களில் சிவாஜி குடித்துவிட்டு (பாரதவிலாஸ்)வருவார்.அவரது மனைவியாக நடிக்கும் கே.ஆர்.விஜயா , குடிச்சிட்டு வந்திருக்கிங்களா? வெளியே போங்க என   வீட்டுக்கு வெளியே துரத்தி கதவை அடைத்து கண்ணீரும் கம்பலையுமாக கதறுவார்.எம்.ஜி.ஆரை பற்றி சொல்லவே வேண்டாம். "தைரியமாகச்சொல் நீ மனிதன் தானா? இல்லை மிருகம்"...என்று பாட்டுபாடுவார்.
          இப்படி இருந்த சினிமாவில் காதலன் படத்தில் பிரவுதேவாவும் அவரது அப்பாவாக வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணயமும் சேர்ந்து மது அருந்துவார்கள். "குடிடா எல்லா பிரச்சனையும் சரியாயிரும்". என்ற படியே பாட்டிலை நீட்டுவார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி என்ற படத்தில் காதலும்,காதலியும் சேர்ந்து மது ஆருந்து வார்கள் ,  குடிகுடியை கொடுக்கும் என மிகசிறிய வாக்கியங்களுக்கு பின்னால் எல்லா திரைப்படங்களிலும் மது அருந்துகிற காட்சி வருகிறது. தமிழ் சமூகம் சினிமா மீது மிக மிக மோகம் கொண்ட சமூகம். குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க சினிமாவும் மிக முக்கி காரணம்.

ஏன் குடிக்கிறார்கள்?

குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியிருக்கி அதே நேரத்தில் குடிகாதவர்கள்  இருக்கிறார்கள்.அவர்க குடிகக்க மறுப்பதற்கான காரணம் தனி ஆய்வுக்குறியது.   குடிப்பதற்கு என்ன தான் காரணம்?என்னை பெருத்தவரை இது தனி மனிதன் ஒருவனின் ஆளுமை சம்பந்தப்பட்ட பிரச்சனை.பொத்தம் பொதுவாக குடும்ப பிரச்சனை,நிம்மதி போச்சு என்பார்கள்.
1.மன பொருத்தம் உடல்பொருத்தம் மில்லாத கணவன்,மனைவிக்குள்ள விவரிக்க முடியாத ஆளுமை பிரச்சனை.

2.குடும்பத்தின் பொருளாதார பிரச்சனைகளால் எற்படுகிற  மனச்சோர்வு

3.கார்,வீடு,இன்ன பிற வசதியோடு பக்கத்து வீட்டுக்காரர்களின் ஆடம்பரமான வாழ்க்கை தான் வாழ முடியவில்லையே என்ற காழ்புணர்ச்சி

4.மகள் திருமணம், மகனின் வேலைகளில் ஏற்படுகிற தாமதம் அதில் ஏற்படுகிற பணபிரசனைகள்..

5.நிண்ட வாழ்க்கை பயணத்தில் ஏற்படுகிற மனச்சோர்வு அதிலிருந்து விடுபட எத்தனிப்பது.

6. வேலை சுழ்நிலையில் ஏற்படுகிற சில புறகணிப்புகள், ஏமாற்றங்கள்....

7.மேற்கண்ட வைகளுக்கு  நேர்மாறக தன் சந்தோசத்தை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள

8.கல்லூரி மாணவர்களுக்கு குடிப்பது என்பது கெளரவப்பிரச்சனை.குடிக்காவிட்டால் கேலி,கிண்டல் தான் கிடைக்கும்

இது போன்றஇன்ன பிற காரணங்கள் இருக்கின்றன...
ஒட்டுமொத்தமாக பார்த்தால் குடிப்பது என்பது மனம்சார்ந்த உளவியல் பிரச்சனை, தன்ஆளுமையை சரி செய்யவும்,தன் பொருளாதார பிரச்சனையிலிருந்து தற்காலிகமாக விடுபடவும்  மது உதவுகிறது. தொடர்ந்து குடிப்பவர்கள் வெளிவரமுடியாத உளவியல் சிக்கலுக்கு ஆட்பட்டு குடிநோய்க்கு ஆளாகிறார்கள்.மரணத்தையும் எதிர்கொள்கிறார்கள்.

மதுவும்  - அரசியல்கட்சிகளும்...எப்போதும் இல்லாத வகையில் வருகிற 2016 தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் மது பாட்டிலை முன்வைத்து நடத்த ஆயத்தமாகி இருக்கின்றன.தேர்லுக்கு குறைந்த பட்டசம் 10 மாதங்களுக்கு மேலாக இருக்கும் நேரத்தில் அனைத்துகட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்கிறார்கள்.இதில் என்ன வேடிக்கை யென்றால் இதுவரை பல முறை ஆட்சி செய்த கட்சிகளும் இந்த வாக்குறுதியை சொல்வது தான்.
                 மாநிலங்களுக்கு கான நீதி ஒதிக்கிட்டை தர அன்றைய இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசு மறுத்த போது (30.8.1971)கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்கிறார்.மேலும் கொளுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்புரமாக தமிழ்நாடு  எத்தனை நாளைக்கு தான் தன்னை பாதுகாக்க கொள்ளமுடியும் ? மதுவிலக்கு ரத்து செய்ததை பற்றி சட்டமன்றத்தில் கருணாநிதியின் பேச்சு.
             என் இறுதி மூச்சு  இருக்கும் வரை  மதுவிலக்குக் கொள்கை நான் நிறைவேற்றுவோன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக்ககொள்கிறேன் என பேசிய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரால் இரண்டு ஆண்டுகள் கூட உறுதியாக இருக்கமுடியவில்லை.
         மது விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் நிறைவருமானம் கிடைக்கும் என்று யோசனை சொன்னார் கருணாநிதி (1983) அந்த யோசனையை 2003ல் அமல் படுத்தினார் ஜெயலலிதா. இன்று சாராய வருமானம் 30 ஆயிரம் கோடி ,அதை 32 ஆயிரம் கோடியா எப்படி ஆக்குவது என்பது தான் அரசின் கவலையாக  இருக்கிறது.
               அவர்,இவர் என்றில்லாமல் இதுவரை தமிழக்தில் அண்ட அனைத்துக்கட்சிகளும் மது விற்பனையில் சாதனை படைத்திருக்கிறார்கள்.
டாஸ்மாக் துவங்கிய போது நாள் ஒன்றுக்கு 25 கோடியில் துவங்கி தற்போது 1கோடிபேர்  தினமும் குடிக்கிறார்கள் .
குளோபல் சர்வே என்ற அமைப்பு இந்தியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் 16% குடிகாரர்களோடு தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 21 சதவீதத்தை பிடித்து முதல் இடத்தில் இருப்பது உத்திரப்பிரதேசம். ஆனால் 20 கோடி மக்கள் தொகை கொண்ட உ.பியுடன் வெறும் 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகம் போட்டி போடும் வேகத்தைப் பார்த்தால் அது இன்னும் சில ஆண்டுகளில் முதல் இடத்திற்கு வர வாய்ப்பு அதிகம்.
மாநிலங்களின் பொருளாதார பிரச்சனையும் மதுவிற்பனையும்...
மது விலக்கை அமல் படுத்த அரசுகள் தயங்குவதற்கு காரணம் மாநில அரசுகளுக்கு தேவையான நிதி ஆதர பற்றாக்குறை என்கிறார்கள் ஆட்சியாளர்கள். மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைபடுத்த நிதி தேவை படுகிறது. அதற்கு டாஸ்மாக் மூலமாக கிடைக்கும் வருவாய் தேவை என்கிறார்கள்." தாலிக்கு தங்கம் ...தாலியறுக்கு டாஸ்மாக்" இது தான் தற்போதைய அரசின் நிலைபாடு .பலரின் தாலி அறுக்கப்பட்டு, சிலருக்கு தாலிக்கு தங்கம் கிடைக்கிறது. மக்கள் நல திட்டங்களுக்கு நிதிக்கு என்ன வழி?
            சமீபத்தில் மூடப்பட்ட நோக்கி தொழிற்சாலைக்கு தமிழக அரசு வழங்கி வந்த சலுகைகள் ....
நோக்கியா தனது கைபேசியை உள்நாட்டில் வியாபாரம்செய்வதன் மூலம் செலுத்தும் “VAT” வரியையும் மத்திய விற்பனை வரியையும் (CST)
தமிழக அரசு திருப்பிச் செலுத்தும் என்பது ஒப்பந்தத்திலுள்ள முக்கியமான சலுகையாகும். இதன்கீழ் 2006-ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த 2010 வரை தமிழக அரசு நோக்கியாவுக்குத் தூக்கிக் கொடுத்துள்ள தொகை ஏறத்தாழ 650 கோடி ரூபாய் மட்டுமல்ல மற்ற சலுகைகளையும் சேர்த்து 1,020 கோடி ரூபாய் வருமானம். மேலும் நோக்கியாவிற்கு தண்ணீர், மின்சாரம், 10 ஆண்டிற்கு வருமான வரி ரத்து போன்ற சலுகைகளை அள்ளி வழங்கி கொள்ளை லாபம்.
மொத்த வருமானம் (2006 – 2013) 1.5 லட்சம் கோடி
வருமான வரி மோசடி 24,000 கோடி
நோக்கியாவின் மொத்த லாபம் ராயல்டி என்கிற பெயரில் 21,000 கோடி ரூபாய் பின்லாந்திற்கு அனுப்பியது.  மேற்கண்ட அனைத்த சலுகைகளும் நம் மக்களின் வரிப்பணம். இத்தனைக்கு பிறகு அந்த ஆலையில் வேலைபார்த்த நம் தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கவில்லை. திடீரென் தனது நிறுவனத்தை விற்றுவிட்டு தொழிலாளர்களை நடுத்தெருவில் விட்டு சென்று விட்டது.
               25 சதம் வரிச்செலுகை பெறும் நோக்கியா,ரிலையன்ஸ்,அதானி,அம்பானி ,விஜய் மல்லையா,சகாரா,சாரதா,டெக்கான்  போன்ற   கார்பரெட்கள் வரியை ஒழுங்காக செலுத்துவதில்லை.
            இது போன்ற எண்ணற்ற  கார்பரெட் நிறுவனங்கள் மக்கள் விரிப்பணத்தை விழுங்குகின்ற. இவற்றை முறை படுத்தினாலே மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி தேவைக்கு அதிகமாக வே கிடைக்கும்.  தற்போதை அரசியல் கட்சிகள் இதை செய்யப்போவதில்லை ... மதுவிலக்கு தேர்தல் நேரத்து வாக்குறுதி மட்டுமே.

மகாகவி மாத இதழில் 
வெளிவந்துள்ள எனது கட்டுரை
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்கருத்துகள்