மதுரையின் வயது என்ன?

உலகில் வயதான பல நகரங்களில் இன்றும் உயிரோட்டமாக உள்ள ஒரு பழம்பெரும் நகரம் மதுரை. நகரமயமாக்கலால் மதுரை பரிணாம வளர்ச்சி அடைந்து வந்ததை இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுக்கள், சிற்பங்கள் போன்ற ஆதாரங்களின் மூலமும் வெளிநாட்டு பயணிகளின் குறிப்புகள் மூலமும் அறியலாம். வரலாற்றுச் சான்றுகளில் மதுரை மாநகரம் ஒரு பெரிய அடித்தளமாக இருக்கிறது; ஆனால் இங்கிருந்து இலக்கிய ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ எந்தவொரு பெரிய அகழ்வாய்வும் நடைபெறவில்லை. இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சியாளரும், கல்வெட்டியல் அறிஞருமான வி.வேதாசலம், கீழடி கிராமப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியை மேற்கொண்டுள்ளார்.


தொல்லியல் வல்லுநரான அவர், மதுரையில் கடைத்தெருக்களுக்குள் உள்ள பகுதியைச் சுற்றி அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திச் சொல்கிறார்.தொன்மை நகரமான மதுரையில் உள்ள வரலாற்றுச் சான்றுகள் பற்றி முந்தைய காலத்திலிருந்து இந்த நவீன காலம் வரையில் உள்ள இலக்கியங்களைப் பற்றியோ அதில் கூறப்படும் ஆய்வுப்பூர்வமான அம்சங்கள் பற்றியோ எந்த ஒரு கருத்து விவாதமும் நடைபெறவில்லை; மதுரைக்காண்டம், நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், தேவாரம் மற்றும் திருவிளையாடற்புராணம் போன்ற இலக்கியப் படைப்புகளின் குறிப்புகளில் மதுரையின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் மதம் போன்ற பண்புகள் - கட்டமைப்புகள் நிறைந்து கிடக்கின்றன.

அகழ்வாராய்ச்சியாளர்களின் சான்றுகளில் இதுவரை சங்ககாலம், சாதவாகனர்களின் காலம், பிறகு பாண்டிய , சோழ, விஜயநகர நாயக்கர்களின் காலம் மற்றும் ரோமானிய நாணயங்கள், சிலைகள், தாமிரத் தட்டுகள் மற்றும் மைக்ரோலித்திக் கருவிகள், மறுபுறம் கல்வெட்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.வளர்ச்சி என்ற பெயரில் தொன்மையான பொருட்கள் மற்றும் அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு, அவற்றை அகழ்வாய்வு செய்வது அவசரத் தேவையாக உள்ளது என்கிறார் முனைவர் வேதாசலம்.பழைய மதுரை, மாசி வீதிகளுக்கு உட்பட்டது. அதைச்சுற்றி அகழி சூழ்ந்துள்ளது.

பல பாண்டியர் கால கட்டமைப்புகள் நாயக்கர் மற்றும் பிரிட்டிஷ் கால கட்டமைப்புகளுக்கு வழி கொடுக்கும் விதமாக புதைந்து விட்டன. எனவே, அகழ்வாய்வுகள் பழம்பெரும் மதுரையின் வரலாற்றுக்குப் புதிய ஒளியைத் தரும்.நவீன காலத்தின் மொழியில் சொல்வதானால், பழைய மதுரை இன்றும் ‘வாயில்களால் மூடப்பட்ட ஒரு பகுதியாக’ இருக்கிறது. இன்றும் கூட, மதுரையில் கிழக்கு வாசல்(கீழவாசல்) விளக்குத்தூண் அருகிலும், மேற்கு வாசல் (மேலவாசல்) பெரியார் பேருந்து நிலையம் அருகிலும் தெற்கு வாசல் தெற்கு வெளி வீதியிலும், வடக்கு வாசல் (வடக்குமாசி வீதி) செல்லத்தம்மன் கோவிலுக்கு அருகாமையிலும் உள்ளன என்பதைப் பார்க்கிறோம்.

காவேரிப்பூம்பட்டினம், காஞ்சிபுரம், கொற்கை, கரூர், அரிக்கமேடு மற்றும் உறையூர் போன்ற பகுதிகளில் அகழ்வாய்வு நடைபெற்று வருவதாக கூறும் முனைவர் வேதாசலம், இந்நகரங்களைக் காட்டிலும் மதுரை மிகப் பழமையான நகரம் என்பதால் அகழ்வாராய்ச்சிக்கு அது ஒரு சிறந்த இடம் என்கிறார்.பழைய மதுரை நகர் மட்டுமின்றி, திருப்பரங்குன்றம், குன்னத்தூர், ஆனைமலை, சமணமலை, கொங்கர் புளியங்குளம், மாங்குளம், அரிட்டாபட்டி, கோச்சடை, தேனூர், துவரிமான், அனுப்பானடி, அவனியாபுரம் மற்றும் அழகர்கோவில் போன்ற இடங்களில் மிகவும் விலைமதிக்க முடியாத தொல்லியல் சான்றுகள் புதைந்து கிடக்கின்றன.

பழைய மதுரை நகரத்திற்கு வெளியே பழங்காநத்தம் கோவலன் பொட்டல் பகுதியில் 1981ல் மாநில அகழ்வாராய்ச்சித்துறை ஆய்வு மேற்கொண்டது. பிரிட்டிஷ் கால அகழ்வாய்வின் போது துவரிமான் மற்றும் அனுப்பானடி பகுதியில் புதைக்கப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவை அறிவியல் பூர்வமானவை அல்ல என்கிறார் முனைவர் வேதாசலம். அனைத்துப் பழம்பெரும் நகரங்கள் போலவே, மதுரையும் அதன் கடந்த காலத்தில் பல ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது.


சோழர் ஆட்சிக் காலத்தில் மதுரை ‘சோழபுரம்’ என்றழைக்கப்பட்டது. மேலும், இங்கு மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கு ‘திரிபுவன வீர தேவன்’ என்று முடிசூட்டு விழா நடைபெற்றது.பத்தாம் நூற்றாண்டு வரை தமிழர்களின் மதம் சார்ந்த புனித இடமாக சிதம்பரமே கருதப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து சைவ நாயன்மார்களில் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

ஆனால் 12ம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழர்களின் மதம் சார்ந்த புனிதத் தலமாக மதுரை மாறியது. கால ஓட்டத்தில் மதுரை பரந்த நகரமாக, மாநகரமாக மாறியது; எல்லா மதங்களுக்கும் ஆதரவு தெரிவித்தது; வெளிநாட்டுப் பயணிகளை உபசரித்தது. ஒன்றுபட்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மதுரை ஒரு முக்கிய இடமாக மாறியது.எனவே தமிழகத்தின் கலாச்சார, இலக்கியத் தலைநகராமாக விளங்கிய மதுரையின் உண்மையான வயதையும் வரலாற்றையும் அறிய மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத்துறைகள், வரலாற்றாசிரியர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கொண்ட குழுவை அமைத்து, மதுரையில் அகழ்வாராய்ச்சிக்கு உகந்த இடங்களையும் தேர்வு செய்து, அதில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் முனைவர் வேதாசலம்.மதுரை வளர்ச்சியின் காலக்கோட்டினை நிர்ணயிக்க ‘கார்பன் டேட்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இந்த அகழ்வாராய்ச்சி, எதிர்காலத்தில் மதுரை ஒரு ‘ஸ்மார்ட் சிட்டி’யாக உருவாகும் போது, அதன் வரலாறு புதைந்து போகாமல் பாதுகாக்க உதவும்.`

தி இந்து’ மதுரைப் பதிப்பு (ஜூலை 13)ஏட்டில் 
வெளியான நேர்காணல் தமிழில் : ஆர்.நித்யா

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

வேல்முருகன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல செய்தி.
கட்டுரை ,
மதுரையின் வரலாற்றை அறிந்து கொள்ள இன்னும் பல்வேறு அகழ்ஆராய்ச்சி தேவை என்பதை உணர்த்தியது
தொடர்ந்து பயணிக்கவும்
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த அகழ்வாராய்ச்சி தோயாமல் தொடர வேண்டுகிறேன்...