சல்மான்கானுக்கு திரையுலகமே கண்ணீர் சிந்துகிறது; இவர்களுக்கு...?

சல்மான் கார் ஏறியதால் காலை இழந்தவர்தான் அப்துல்லா ரவுப் ஷேக். இவர் ஒரு பேக்கரி தொழிலாளி. அவர் பணியா ற்றிக்கொண்டிருந்த ஏ-ஒன் பேக்கரியில் பணிமுடித்து அருகில்உள்ள அமெரிக்கன் பேக்கரி வாசலில் அவரும் சக தொழிலாளர்களும் உற ங்கிக்கொண்டிருந்தனர். வாழ்நாளில் மறக்கமுடியாத அந்த படுபயங்கரமான சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “எங்களுக்கு வீடு இல்லை.
அதனால் தான் நடைபாதையில் தூங்குகிறோம். மும்பைபோன்ற பெருநகரங்களில் பேக்கரியில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியால் வீடுவாங்க முடியுமா? ரயில்நிலைய நடைபாதையில் இலவசமாக படுக்கமுடியுமா? அங்கேபடுக்க யாராவது அனுமதிப்பார்களா?
எங்களைப்போன்ற மிகவும் ஏழை மக்கள் மும்பையில் உள்ள ரயில் நிலைய நடைபாதைகளில் படுக்க ஆரம்பித்தால் பயணிகள் நடக்க இடமே இருக்காது. கடுமையான வேலைப்பளு காரணமாக அடித்துப்போட்டது போல்அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் எங்கள் மீது கார் ஏறியிருக்கிறது என்பதை உணரவே சில நிமிடங்கள் ஆனது.நாங்கள் வேலைசெய்த பேக்கரியும் சிறியது. அதற்குள்ளேயே தூங்க போதுமான இடம் இல்லை. எனவே தான் நடைபாதையில் தூங்கினோம்’’ என்கிறார்.13 ஆண்டுகள் இழத்தடிக்கப்பட்ட வழக்கில் சல்மான் கானுக்கு நீதிமன்றம் சலுகை மேல் சலுகை அளித்துள்ள நிலையில் அப்துல்லா ஷேக் இன்னமும் சரியாக நடக்க முடியாமல் அவதிப்படுகிறார். “விபத்து ஏற்பட்டவுடன் நான் சல்மான் கானை பார்த்தேன். காருக்குஅடியில் சிக்கி கடுமையான வலியால் நான் அவதிப் பட்டுக் கொண்டிருந்தேன்.
ஆனால் காவல்துறை வருவதற்கு முன்பே அந்த இடத்தில் இருந்து அவர் சென்றுவிட்டார். சல்மான் கானுடன் காரில் இருந்த எவரும் எங்களுக்கு உதவமுன்வரவில்லை. அவர் எனது வாழ்க்கையை சூனியமாக்கி விட்டார். விபத்திற்கு பிறகு ஒரு நயாபைசா கூட வழங்கவில்லை.நீதிமன்றம் ஆணையிட்ட பிறகுதான் நட்டஈடு கிடைத்தது. நீதிமன்ற உத்தரவுபடி சல்மான்கான் கொடுத்த ரூ.3 லட்சத்தில் எனது வழக்கறிஞர் ரூ.1.2லட்சத்தை வழக்குக்கான செலவு என்று எடுத்துக்கொண்டார்.
இந்த நட்டஈடும் விபத்து நடந்து ஐந்தாண்டுகள் கழித்து அதாவது 2007ஆம் ஆண்டுதான் கிடைத்தது’’ என்றார்.தற்போது பந்தரவில் உள்ள ஸ்டேபிள் என்ற பேக்கரியில் அப்துல்லா பணியாற்றுகிறார். காரணம் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது அவர் ஏற்கனவே பணியாற்றிக்கொண்டிருந்த பேக்கரியின் உரிமையாளர் எந்த உதவியும் செய்யவில்லை.
சல்மான் கார் விபத்தில் இவர் சிக்கியதில் இருந்து அனைவரும் இவரை அப்துல்லா என்று அழைப்பதை நிறுத்திவிட்டு சல்மான் என்றுதான் அழைத்து வருகிறார்கள். சல்மான் கான் வழக்கில் மும்பைஅமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் அனைவரும் அப்துல்லாவை தேடினர். அவர் பெயர் அப்துல்லா என்று புதிய பேக்கரியில் பணிபுரிவோர் யாருக்கும் தெரியாது. இதனால் வந்த பத்திரிகையாளர்களும் பேக்கரி ஊழியர்களும் குழப்பமடைந்தனர்.
பின்னர் அப்துல்லாவே விஷயத்தை தெரிவித்தபின்னர்தான் அனைவரும் தெளிவானார்கள். ஒரு விஷயம் என்னவென்றால் அப்துல்லாவுக்கு சல்மான் கானால்புதிய பெயர் கிடைத்தது மட்டும்தான் மிச்சம் என்று நகைச்சுவையுடன் கூறுகிறார் அந்த பேக்கரியின் உரிமையாளர் நயீம் அன்சாரி.‘இந்த விபத்துக்கு பிறகும் நடைபாதையில் தூங்குகிறீர்களா’’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ‘இல்லை’ என்று கூறிய அப்துல்லா, “பேக்கரியை யொட்டி உள்ள சிறிய அறையில் தான் தூங்குகிறேன்.
தகரத்தால் வேயப்பட்ட அந்த அறைக்குள் வெயில்காலத்தில் தூங்கமுடியாது. இதனால் பல நேரங்களில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன்’’ என்றார்.இன்னமும் சல்மான் கான் நடித்த திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றுகூறும் அப்துல்லா, சல்மான் கானுக்கு தண்டனை வழங்குவதால் என்னுடைய பிரச்சனையோ அல்லது கால் வலியோ தீரப்போவதில்லை என்று விரக்தியுடன் கூறினார். சல்மான் கார் ஏறி இறந்து போன நூருல்லா என்பவரது மனைவி மெஹபூப் ஷெரீப், கூறுகையில், எங்களுக்கு மோட்டார் வாகன இழப்பீடாக ரூ.10 லட்சம் கிடைக்கும் என்றார்கள். ஆனால் கிடைக்கவில்லை. எனது இரண்டு மகன் வேலைக்கு செல்வதால்தான் குடும்பத்தை நடத்தமுடிகிறது என்கிறார்.இந்த விபத்தில் படுகாயமடைந்த மன்னுகானுக்கு நான்கு மகள்கள்.
ஒரு மகன். அவரும் அவருடைய சகோதரரும் விபத்து நடந்தபின்னர் பேக்கரி உரிமையாளர் உதவிஏதும் செய்யததால் வேறு ஒருபேக்கரிக்கு சென்றுவிட்டனர். அவரும் கஷ்டப்பட்டுதான் ஜீவனம் நடத்துகிறார். மற்ற தொழிலாளிகளான முகமது காலிம் இக்பால், நியமாத் ஷேக் ஆகியோர் தங்களது பணியை விட்டு சொந்த ஊரான உத்தரபிரதேசத்திற்கு சென்றுவிட்டனர். இவர்கள் யாருக்கும் போதுமான இழப்பீடு கிடைக்கவில்லை. ஆனால் விபத்தை ஏற்படுத்திய நடிகரை பாதுகாக்க இந்தி திரைஉலகமே திரள்கிறது. அவருக்காக கண்ணீர் வடிக்கிறது.
ஆனால் வாழ்நாள் முழுவதும் நடைபிணமாகிப்போன இந்த பேக்கரி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அல்ல, ஆறுதல் சொல்லக்கூட எவரும் இல்லை.

தகவல் தீக்கதீர்
தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

இன்றைய மனித நேயம் இது தான்... பாவிகள்...
Yarlpavanan said…
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்