சென்னை,மதுரை,கோவையில் நிலநடுக்கம் வர வாய்ப்பு???

சென்னையில் அடையாறு அதிக ஆபத்துள்ள பகுதி
கடற்கரையையொட்டி சென்னை நகரம் உள்ளதால் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதுஎன்பது மட்டும் அல்ல; நேபாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், நமது மாநிலம் அதுபோன்ற இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் உள்ளதா என்பதை பரிசீலனை செய்ய ஒருவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.சென்னை மாநகரமும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று கருதப்படும் பகுதியில்தான் உள்ளது.

சென்னை நகரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்தால் கட்டுமான நிறுவனங்கள் வானளாவிய கட்டிடங்களை கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
வீட்டுக்கு வீடு வாகனங்களும் பெருகிவிட்டதால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்போது தரைதளத்தில் வாகன நிறுத்தும் இடத்திற்கு விட்டு விட்டு முதல்மாடியில் இருந்து குடியிருப்புகளை அமைக்கிறார்கள். அப்படி அமைக்கும்போது அந்த தூண்கள் வலுவானவையாக இருக்கவேண்டும். இல்லையெனில் இதுபோன்ற கட்டுமானங்கள் ஆபத்தை உருவாக்கும் என்கிறார்சென்னை அண்ணாபல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான ஏ.ஆர். சாந்தகுமார்.தரைதளம் முழுவதும் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு ஒதுக்கி கட்டப்படும் கட்டிடம் எந்த அளவில் கட்டவேண்டும்;

தூண்களின் சுற்றளவு எந்த அளவு இருக்கவேண்டும் என்றுவிதிமுறைகள் உள்ளன. குறைந்த பட்சம் அந்த தூண்கள் 300 மிமீ அளவு அல்லது ஒரு அடி அகலம் இருக்கவேண்டும் என்றும் அவர்கூறினார். பத்துமாடி கட்டிடம் அல்லது அதற்கு மேல் என்றால் தூண்கள் குறைந்தபட்சம் ஒருமீட்டர் சுற்றளவோடு இருக்கவேண்டும். மேலும் பழைய கட்டிடங்கள் என்றால்அரசு நிர்வாகத்தினர் ஆய்வுசெய்து அந்தகட்டிடத்தை புதுப்பித்து பலப்படுத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.பழைய கட்டிடத்தை புதுப்பிக்கவேண்டும் என்றால் தூண்களை அகலப்படுத்தவேண்டும்.

இது கட்டிடத்தின் மொத்த செலவில் 25 விழுக்காடாக இருக்கும். அதேநேரத்தில் நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய கட்டிடதொழில்நுட்பம் என்றால் மொத்த செலவில் 15 விழுக்காடுக்கும் சற்று அதிகமாக தேவைப்படும் என்றும் அவர்கூறினார். கட்டிடங்களில் தீ தடுப்பு வசதிகளும் அவசியம். காரணம் நில நடுக்கம் ஏற்பட்டால் கட்டிடங்கள் இடிந்து விழும்போது மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்கும் ஆபத்து உண்டு.


3வது மண்டலத்தில் சென்னை

சென்னை மாநகரை பொறுத்தவரை நில நடுக்க மண்டலம் 3ல் உள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் நகரில் ரிக்டர் அளவையில் 6 வரைநிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உள்ளது. நகரில் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் பல உண்டு என்றாலும் சில பகுதிகளில் வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக அடையாறுபகுதி மிகவும் மோசமான நிலத்தட்டின் மீது அமைந்துள்ளது. அந்தப்பகுதியில் பூமிக்கடியில் உள்ள மண் பொலபொலவென்று உள்ளதால் பூமிக்கடியில் மிகப்பெரிய பாறைகள் நகரும்போது கட்டிடங்கள் எளிதில் உடைந்து விழும் ஆபத்து உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மறுபுறம் கடும்பாறைகள் உள்ள பகுதிகளில் போடப்படும் தூண்கள் நில நடுக்கத்தை ஓரளவு சமாளிக்கும் வகையில் உள்ளன.அதே நேரத்தில் சென்னையில் உள்ள கட்டிடங்கள் நில நடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் உள்ளன என்று அரசுத் தரப்பினர் தொடர்ந்து கூறிவருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் நில நடுக்கத்தை தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டவேண்டும் என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் ஆண்டுதோறும் ஆயிரம்கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடங்களை கட்டுகிறோம்; அவைஅனைத்தும் பாதுகாப்பானவை என்றும் பொதுப்பணித்துறையின் ஆலோசகர் ஆர். எமராஜ் கூறுகிறார்.

வரைபடம் சொல்வது என்ன?

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகள் என்று தகவல்களை புதுப்பிக்கும் இந்திய தரநிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) அதுகுறித்த வரைபடத்தையும் வெளியிட்டு வருகிறது. கடைசியாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வரைப்படத்தில் முந்தைய வரைப்படத்தை விட தமிழகத்தில் மேலும் பலபகுதிகள் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிக்குள் வந்துள்ளன. இந்த அமைப்புதான் நில நடுக்கத்தை தாங்கக்கூடிய கட்டிடத்திற்கான பொறியியல் வடிவமைப்புக்கான விதிமுறைகளையும் உருவாக்கி வருகிறது. மாநிலத்தில் மேலும் பல பகுதிகள் நில நடுக்கம் ஏற்படும் பகுதியின் மேல் அமைந்துள்ளதையும் அது கண்டுபிடித்துள்ளது.

காவிரி, வைகை ஆற்றோரப்பகுதி, கல்முனை அருகில் உள்ள பகுதி ஆகியவை இதில் அடங்கும். அதாவது மதுரை, தஞ்சாவூர், கோவை,நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய நகரங்கள் இதன் அருகில் உள்ளன.

தகவல் :தீக்கதீர்
தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments



உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.
blogspot.com