இறைவனுக்கு காணிக்கையாக விளக்குமாறு வழங்கும் வினோத திருவிழா

இறைவனை மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது மும்மதத்தினரின் அதீத நம்பிக்கை. அவ்வாறு வேண்டும்பொழுது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் நன்றிக்கடனாக இறைவனுக்கு பொருளோ, பணமோ, செய்வதும் உண்டு. இது மும்மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். இந்து மதத்தில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினால் மாவிளக்கு எடுத்தல், அக்னிச் சட்டி எடுத்தல், காது குத்துதல், கிடா வெட்டுதல், தீ மிதித்தல், முளைப்பாரி எடுத்தல், கோவிலுக்கு நன்கொடை வழங்குதல் பல்வேறு வகைகளில் ஆண்டவனுக்கு நன்றிக்கடனாக வழங்குகின்றனர்.

கிறிஸ்தவர்கள் தங்களது நன்றிக்கடனாக மெழுகுவர்த்தி ஏந்துதல், உப்புமிளகு வாங்கி வைத்தல், நன்கொடை வழங்குதல் என பல்வேறு வகைகளிலும் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தேவாலயத்தில் தங்களது நன்றிக்கடனுக்கு விளக்குமாறை வழங்கி வழிபடும் வினோத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து 5 கி.மீ. தொலைவில் தோமையார்புரம் என்ற கிராமம் உள்ளது. திண்டுக்கல் _ மதுரை தேசிய நெடுஞ்சாலையிலேயே தோமையார்புரம் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவில் தோமையார்கரடு என்ற இடத்தில் புனித தோமையார் திருத்தல ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறுகின்ற விழாவின் போது விளக்குமாறை பக்தர்கள் காணிக்கையாக வழங்குகின்றனர். இக்கோவில் வரலாற்றையும், விளக்குமாறை காணிக்கையாக வழங்குவது குறித்தும் பக்தர்கள் கூறுகையில்,
 இப்பகுதியில் உள்ள சிறுநாயக்கன்பட்டி, ஏ.வெள்ளோடு, தோமையார்புரம் உள்ளிட்ட இதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் இப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்த்து வந்தனர். அப்போது நரி உள்ளிட்ட மிருகங்கள் ஆடு மாடுகளை கொன்று தின்று வந்தன. இதனால் தோமையாரை வணங்கி இங்கு ஒரு சிலுவையுடன் கடந்த 21.3.1891ம் வருடம் புனித தோமையார் தேவாலயம் துவங்கப்பட்டது.
இயேசுவின் பன்னிரு தூதர்களில் ஒருவர் தோமையார். இவர் உயிர்த்த ஆண்டவரின் அடையாளம் கண்டு அவரை ஆண்டவராக ஏற்று கொண்டவர். மக்களிடையே அமைதியையும், அன்பும் பெற வேண்டும் என்பதற்காக இந்தியா வருகை தந்த தோமையார் இங்குள்ள மக்களின் சமாதானத்திற்காக ஜெபம் செய்தார். அவரை நினைத்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது கிறிஸ்தவர்களின் ஐதீகம் ஆகும். குறிப்பாக குப்பைகளை கூட்டுவதற்கு விளக்குமாறு எவ்வளவு பயனுள்ளதாக உள்ளதோ, தங்களது உடலில் உள்ள தோல் வியாதிகளை அறவே துடைத்தெறிய வேண்டுமென்று தோமையாரை மனமுருக வேண்டுகின்றனர். முகத்தில் உள்ள பரு, வடு, முற்றிலும் மறைய வேண்டும் என்பதற்காகவும் வணங்குகின்றனர். தோல் வியாதியும் அறவே ஞிங்கிய பின்னர் தங்களது நன்றிக்கடனாக விளக்குமாறை வழங்குகின்றனர். தோல் வியாதி மட்டுமல்லாது உடலில் பல்வேறு நோய்களையும் தீர்க்க வேண்டுமென புனித தோமையாரை வணங்கினால் அது நிறைவேறும் என்பது நம்பப்படுகிறது. அதனால் கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது மும்மதத்தினரும் புனித தோமையாரை வணங்கி வருகின்றனர்.

மேலும் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் புனித தோமையாரை வணங்கி தங்களது தோட்டத்தில் விளைந்த தேரை தேங்காய், புளி, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்டவையும் திருத்தேவாலயத்தில் வைத்து வழிபடுகின்றனர். பின்னர் அதனை தங்களது தோட்டத்திற்கு எடுத்துச் சென்று விவசாயம் செய்து நல்ல மகசூலை அடைந்த பின்னர் புனித தோமையாருக்கு நன்றிக்கடனாக தேங்காய், புளி, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட பல்வேறு வகையான பழவகைகளையும் வழங்குகின்றனர்.
தேவாலயத்தை நிர்வாகித்து வரும் ஊர் பெரியதனக்காரர்கள், பக்தர்கள் வழங்கக்கூடிய விளக்குமாறு, தேங்காய், புளி, எலுமிச்சை, கொய்யா, மெழுகுதிரி, உப்பு மிளகு உள்ளிட்ட பல பொருட்களை பெற்று அதனை ஏலம் விடுகின்றனர். ஏலம் மூலம் வரும் பணத்தை தேவாலயத்தின் திருப்பணிகளுக்காக பயன்படுத்துகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நவநாள் குணமளிக்கும் திருப்பலியில் பங்கேற்கின்றனர். அங்கு தங்களது ஜெபத்தால் கிடைத்த பலனை பகிர்ந்து கொள்வதோடு காணிக்கையும் வழங்கி செல்கின்றனர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த புனித தோமையார் திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்த 2வது வாரத்தில் 3 நாட்கள் விழா நடைபெறுகிறது. தற்போது 124வது ஆண்டாக கடந்த ஏப்ரல் 17ம் தேதி துவங்கியது. அன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. உயிர்த்த ஆண்டவர் மற்றும் புனித தோமையாரின் சப்பர பவனி, 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நகர் உலா வந்தது. அத்துடன் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது. இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தோமையாரின் ஆசி பெற்று சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பக்தர்கள் ஞிண்ட வரிசையில் விளக்குமாறுடன் நின்று புனித தோமையாரை வணங்கி சென்றனர். திருவிழா நிகழ்ச்சியினை பங்குப்பணியாளர் எஸ்.ஜூலியஸ் அருள்ராயன், அமலவை அருட்சகோதரிகள், ஊர் பெரியதனக்காரர்கள், சிறப்புற செய்திருந்தனர்.
 சிறியதாக உள்ள புனித தோமையாரின் ஆலயம் விரைவில் விரிவுபடுத்தப்பட்ட ஆலயமாக கட்டப்பட உள்ளது. அதற்கான நன்கொடைகளும் கோவில் நிர்வாகத்தால் வரவேற்கப்படுகிறது. இக்கோவிலுக்கென இணையதள முகவரி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். இம்முகவரி  www.stthomashrine.gm.cc. முக்கியமாக புனித தோமையார் திருவிழா என்பது ஜாதி, மத பேதமின்றி நல்லிணக்க விழாவாகவும், அனைவரும் கொண்டாடும் விழாவாகவும் அமைந்துள்ளது. மனிதநேய விழாவாகவும் புனித தோமையார் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தகவல் :டி.தனராஜ்,திண்டுக்கல்.  
தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

புதிய தகவல்...

டி.தனராஜ் அவர்களை சந்திக்க வேண்டும்...

9944345233