பிழைக்கத் தெரியாதவர்களால் பிழைக்கிறது இவ்வுலகம் -சகாயம்


தலைப்பைச் சேருங்கள்
உண்மையை பேசுவது மட்டும் தான் சத்தியமா? அநீதிக்கு எதிராய் ஆவேச குரல் எழுப்புவதும், ஏழைகள் கஷ்டத்தை புரிந்து கொண்டு, ஏழைகள் துயர் துடைக்க தீர்வு காண்பதும் சத்தியம் என்றே உணர்கிறேன். அதையே நான் முயற்சிக்கிறேன்.“லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்” என்ற வாசகம் எனது அலுவலகத்தில், எனது பின்புற சுவரில் எழுதப்பட்டிருக்கும். 20 ஆண்டுகளில் 21 பணி மாறுதல்கள். அது பற்றி எனக்கு கவலையில்லை. இதுதான் நான். யாருக்காகவும் என்னை மாற்றி கொள்ள முடியாது.தேசம் முன்னேறியது என்று மும்பை, தில்லி ,சென்னை போன்ற நகரங்களை பார்த்து நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
எனது தேசத்தில் உள்ள கிராமங்களில் முழுமையாய் அடிப்படை வசதிகள் என்று சென்றடைகிறதோ? அன்று தான் என் தேசம் முன்னேறியதாக பொருள் கொள்ள முடியும். அதற்கான எனது பங்களிப்பு எனது முழு திறனுடன் தொடரும்.சத்தியம் என்பதற்கு உடனடி நீதி என்றும் பொருள் இருப்பதாகவே நான் உணர்கிறேன். இயன்றவரை அதை செயல்படுத்தவே நான் விரும்புகிறேன்.


நான் நாமக்கல்லில் ஆட்சி தலைவராக இருந்தபொழுது கிராமங்களில் இரவு கூட்டம் நடத்துவோம். அப்பொழுது பெறும் மனுக்களில், பெரும்பாலும் அன்றைய இரவே தீர்வு காணப்பட்டவை அதிகம். அதில் ஒரே இரவில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பட்டா வழங்கியது கூட உண்டு. ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் வழங்குமாறு மனுக்கொடுத்தார்.

பத்தே நிமிடத்தில் வழங்க ஏற்பாடு செய்ததோடு, அவரது ஊரிலேயே அதனை இறக்கவும் வழி செய்யப்பட்டது. அது சிறிய பணியாக கூட இருக்கலாம். ஆனால் அவை அவர்களது வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கக்கூடும்.ஒரு பயிற்சிக்காக 54 நாட்கள் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றேன். நான் அங்கு இருந்த சமயத்தில், நான் பணி மாற்றம் செய்யப்பட்டேன். ஆனால் அடுத்த எனது பணி எங்கு என்பது அந்த பணி மாறுதல் உத்தரவில் இல்லை. எனது குடும்பம் தமிழ்நாட்டில் ஆட்சித் தலைவருக்குமான இல்லத்தில் இருந்தனர். உடனடியாக ஆட்சித் தலைவருக்கான இல்லத்தை காலி செய்ய வேண்டிய சூழல். நான் அங்கிருந்தபடியே மாற்று ஏற்பாடுகளை நண்பர்கள் மூலம் செய்து, சிறிய வாடகை வீட்டிற்கு எனது குடும்பத்தினர்களை மாற்றினேன்.அன்றைய காலம் தேர்தல் நெருங்கிய காலம். தேர்தல் ஆணையம் என்னை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக அழைத்து கொண்டது.

மதுரையில் “ஓட்டுக்கு பணம்” என்ற தவறான சிந்தனையை உண்டாக்கி வைத்திருந்தார்கள். தேர்தலுக்கு வெறும் 19 நாட்கள் இருந்தன. நான் இளைஞர்களை நோக்கி சென்றேன். கல்லூரிகளை நோக்கி சென்றேன். சமூகத்தை சரி செய்ய வேண்டிய கடமையை இளைஞர்கள் உணர்ந்திருந்தனர். எனவே இதையும் புரிந்து கொண்டு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்ததோடு மட்டுமல்லாது, களத்தில் இறங்கி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.“ஓட்டுக்கு பணம் வாங்காதே! உன் சிந்தனையில் மாற்றம் செய்” என்ற எனது பிரச்சாரத்தினை மக்களிடையே ஆட்சி மாற்றம் தேவை என்று நான் பிரச்சாரம் செய்வதாக என் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதியரசர்கள் எனது பேச்சின் ஒலிபேழையை கேட்டு, என் மீது தவறில்லை என அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். எனது கீழ் பணிபுரியும் அதிகாரிகளை வைத்தே எனக்கு எதிராக பொய் புகார்கள் கொடுக்கப்பட்டன. உண்மை தெரியவரவும் பொய்புகார் கொடுத்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அந்த தேர்தலில் அந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நல்ல தாக்கத்தை உண்டாக்கியது.மாற்றம் ஒன்றே நிலையானது. அடுத்து நான் கோ-ஆப்டெக்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டேன்.

கோ-ஆப்டெக்ஸில் பணி நிமித்தமாய் கள ஆய்வுகள் செய்தபொழுது கண்ட காட்சிகள் மனதை உலுக்குகின்றது. ஒரு கணவனும், மனைவியும் ஒரு நாள் முழுவதும் பணி செய்தால் இருவருக்கும் சேர்த்தே, பல இடங்களில் ரூ.125க்குள் தான் கிடைக்கின்றது. அவர்களால் தான் கோ-ஆப்டெக்ஸ் இயங்குகிறது. ஆனால் கோ-ஆப்டெக்ஸ் கடைநிலை ஊழியருக்கு கிடைக்கும் ஊதியத்தில் பாதியளவு கூட நெசவாளிக்கு கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நெசவாளி என்பவர் ஒரு தொழில்திறன் அறிந்த கலைஞர் ஆவார். இன்றைய காலகட்டத்தில் தனது தொழிலில் குறைந்தபட்ச ஊதியம் கூட கிடைக்காமல், பல இடங்களில் நெசவாளிகள் சமையல் பணிக்கு சென்று கொண்டிருப்பதாய் பலர் கூறியது எந்த சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற வேதனையை என்னுள் அதிகமாக்கியது.வருகின்ற டிசம்பர் இறுதிக்குள் ஒவ்வொரு நெசவாளிக்கும், நாள் ஒன்றுக்கு ரூ.200 வருகின்ற வகையில் கோ-ஆப்டெக்ஸில் திட்டங்கள் செயல்படுத்த உத்தரவுகள் பிறப்பித்துள்ளேன்.

அதிகாரம் என்பது மக்களிடமிருந்து வந்தது. அதனை மக்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.பலரும் என்னை பிழைக்க தெரியாதவன், பைத்தியக்காரன் என்றெல்லாம் என் காதுபடவே பேசியிருக்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரியும் ‘இப்படிப்பட்ட பைத்தியக்காரர்களால் தான் வரலாற்றின் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன’ என்று. எனவே நான் இப்படி இருப்பதையே பெருமையாய் கருதுகிறேன்.

திருச்சி தமுஎகச வயல் மாத
 கூட்டத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Sridharan said…
அதிகாரம் என்பது மக்களிடமிருந்து வந்தது. அதனை மக்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.பலரும் என்னை பிழைக்க தெரியாதவன், பைத்தியக்காரன் என்றெல்லாம் என் காதுபடவே பேசியிருக்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரியும் ‘இப்படிப்பட்ட பைத்தியக்காரர்களால் தான் வரலாற்றின் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன’ என்று. எனவே நான் இப்படி இருப்பதையே பெருமையாய் கருதுகிறேன்.

திருச்சி தமுஎகச வயல் மாத
கூட்டத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ்

இதை போன்ற இடுகைகளை நமது பாரத பிரதமர் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பது என் அவா
Seeni said…
பகிர்வுக்கு நன்றி..
Unknown said…
இதை பேசிய பிறகும் கூட ,அவர் மாறுதலுக்கு உள்ளாகி இருக்கிறார் .சமூகம் முன்னேற பாடுபடும் அய்யா சகாயம் அவர்களின் பெயர் வரலாற்றில் இடம்பெறும் !
krish said…
நம் தலைமுறையில் காணும் அபூர்வமான மனிதன்,
என்றும் வாழ்க.