கத்தி... இடதுசாரியின் விமர்சனம்

இன்ன கதையைச் சொல்லக்கூடாது, இந்த வசனங் களைச் சேர்க்கக்கூடாது, இவ்வகைகதாபாத்திரங் களை வைக்கக் கூடாது, இப்படியான பெயரைச் சூட்டக்கூடாது என்பதான கெடுபிடி யெல்லாம் கடந்து போக இன்னார் தயாரித்ததால் வெளியிடக்கூடாது என்ற புதுவகை எதிர்ப்பைக் கிழித்துக்கொண்டு வந்திருக்கிறது இந்தக் ‘கத்தி.’பொதுவாக வரக்கூடிய பல படங்கள் மக்களின் பிரச்சனை களைப் பேசுவதில்லை, பிரச்சனை களைப் பேசுகிற படங்களோ தேர்ந்தெடுத்த சிலர் மட்டுமே பார்க்கக் கூடியதாக, மக்களைச் சென்றடைய முடியாததாக இருக்கின்றன.


மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டுகிற, இயற்கையின் வளத்தை லாப தாகத்தோடு உறிஞ்சு கிற உலகளாவிய எதிரிகளை அடையாளம் காட்டுகிற படம், பலரும் பார்க்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற் கப்பட வேண்டியதே. ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ‘பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ (தமிழில் இரா. முருகவேல், வெளியீடு: விடியல் பதிப்பகம்) புத்தகத்தில், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு நாட்டில் தொழில் தொடங்கவும் அதற்காக நிலங்களை வளைத்துப் போடவும், அதற்கேற்ப அந்நாட்டின் சட்டங்களை வளைக்கவும், அதிகார பீடங்களைப் பிடிக்குள் வைத்துக் கொள்ளவும், ‘சாம தான பேத தண்ட’ வழிமுறைகள் அனைத்தையும் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பது முதுகுத் தண்டு சில்லிட வைக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கும். இந்தப் படத்தில், கிராமத்து மக்களை வெளியேற்றி விளை நிலங்களை விழுங்க வருகிற ஒரு குளிர்பான கார்ப்பரேட் தாதா செய்வது அது போன்றதுதான்.

இன்றைய பொருளாதார உலகமயமாக்கல் சூழலில் அதை நியாயப் படுத்துகிற, அதைத் தடுக்க முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிற, அதனோடு அனுசரித்துப்போகச் சொல்கிற கதைகள்தான் நிறைய வருகின்றன. அதனால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றிச் சிந்திக்கவிடாமல் வெறும்பொழுதுபோக்கில் மக்களைத் தள்ளிவிடுகிற படங்களே படை யெடுக்கின்றன. இந்தப் படத்தின் ஜீவானந்தம் கிராம மக்களைத் திரட்டி, கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சிகளைத் தடுக்கப் போராடுகிறான்.கொல்கத்தா சிறையிலிருந்து தப்பித்து வருகிற, கிரிமினல் கில்லாடியான கதிரேசன் அந்த ஜீவானந்தம் போலவே இருப்பதும், அடியாட்களின் கொலை முயற்சியி லிருந்து ஜீவானந்தத்தைக் காப் பாற்றுவதும், பின்னர் தானே ஜீவாவாக மாறி எதிரியை வதம் செய்யக் கிளம்புவதும், ‘நாடோடி மன்னன்’ காலத்திலிருந்து வழி வழியாக வந்துகொண்டிருக்கிற இரட்டைக் கதாபாத்திர சரக்குதான்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்து அமர வைக்கும் இந்த பொழுதுபோக்குக் கதைப்போக்கு பின்னர் எந்தச் செய்திக்குள் போகிறது என்பது இதனை ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக்குகிறது. ஜீவானந்தத்தின் இடத்திற்கு வருகிற கதிரேசனை அதி புத்திசாலியாக, கிரிமினல் மூளையை நல்ல நோக்கத்திற்குப் பயன்படுத்து கிறவனாக, ஐம்பது பேர் வந்தாலும் ஒற்றை ஆளாக அடித்து வீழ்த்துகிற சாகசக்காரனாக சித்தரித்து விட்டு, உண்மைப் போராளியான ஜீவானந்தத்தை அப்பாவியாய் அடிவாங்குகிறவராகக் காட்டியி ருப்பது சரிதானா? கிராமத்துப் பிரச்சனையின் பால் ஊடகங்களின் கவனத்தைக் கவர்வதற்காக கதிரேசன் கடைசியில் கையாளுகிற உத்திகள் நடைமுறை சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. ஆயினும்,புதிய போராட்ட வழிமுறைகள் தேவை என்ற சிந்தனையின் வெளிப்பாடாக அதை எடுத்துக் கொள்ளலாம்.வெறும் தனி மனித சாகசமாக இல்லாமல், மக்களைத் திரட்டுவதே தீர்வுக்கு வழி என்ற கருத்து சொல்லப்படுவதும் முக்கியமானது. கார்ப்ப ரேட் ஆதிக்கத்தால் மக்கள் வாழ் வாதாரம் அழிக்கப்படுவது பற்றி ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் நடுநிலை நாடகம் நடத்துவது பற்றிய விமர்சனம் காட்சியாகப் பதிவாகியிருக்கிறது.

தொடக்கத்தில் ஊடக வெளிச்சம் பெறுவதற்காக கிராமத்துப் பெரியவர்கள் ஆறு பேர் எடுக்கிற முடிவு, இறுதியில் ஊடகங் களின் முன் பேசுகிற கதிரேசன் விவசாயிகளின் தற்கொலை பற்றிச் சொல்வது போன்ற இடங்கள் கண்ணில் நீர் கோர்க்கச் செய்கின்றன.கிராம மக்களின் போராட்டத்திற்கு நகர மக்களின் ஆதரவைத் திரட்டுகிற முயற்சியின் வெற்றியாக அனைத்து ஊடகங்களும் திரண்டிருப்பது கண்டு புளகாங்கிதம் அடைகிற நண்பனிடம், “இது மீடியா பசி... இதை மக்களின் பசியாக மாற்றணும்” என்று கதிரேசன் கூறுவதில் போராட்ட அரசியலுக்கான அடிப்படைக்கூறு இருக்கிறது.முதியோர் புறக்கணிக்கப்படும் சமூகச் சூழலில், அவர்களைத் தீரர்களாக முன்வைத்திருப்பது பாராட்டுக்குரியது. “வயசுங்கிறது டேட் ஆப் பெர்த்தில் இல்லை... இங்கே இருக்கு” என்று நெஞ்சைச் சுட்டிக்காட்டுவது இளைஞர் களுக்கும் பொருந்தும். விளை நிலங்களை அழிக்கும் மீத்தேன் திட்டம், காற்றிலும் ஊடுருவிய 2ஜி ஊழல் ஆகியவையும் தொட்டுக் காட்டப்படுகின்றன.

ஜீவாவின் மேசையில் ஒரு புத்தகத்தைக் கையில் எடுக்கும்தங்கை கேட்கிறாள்: “அண்ணே, கம்யூனிசம்னா என்ன, ஒரு வரியில சொல்லு பார்க்கலாம்.” ஜீவா சொல்கிறான்: “நம் பசி யாறிய பிறகு மிஞ்சுகிற இட்லி இன்னொருத்தருடையது.” கம்யூ னிசம் பற்றிய முழுமையான, சரியான புரிதல் அல்ல இது என்றாலும், கம்யூனிச சிந்தனை காலாவதியாகிவிட்டது என்று கதைக் கப்படுகிற காலகட்டத்தில் இது ஒரு ஆக்கப்பூர்வமான பார்வை.முன்பு ஒரு அமெரிக்க குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்துகொண்டு விமர்சனத்திற்கு உள்ளான விஜய், இதில் ஒரு பன்னாட்டு “கோலா” நிறுவனத்தை எதிர்த்துப் போராடு கிறவராக வருவது குறிப்பிடத்தக்கது. அவரது கலகல நடிப்பு, நடனத் துடிப்பு எல்லாமே ரசிக்கத்தக்கவை.ஒளிப்பதிவு, இசை, தொகுப்பு எல்லாமே சரிவிகிதக் கலவையாய் விறுவிறுப்புக்குத் துணை நிற்கின்றன. தயாரித்தவர், நடித்தவர், இயக் கியவர் என எல்லோருக்குமே வணிகமே நோக்கம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், ஒரு பகுதி மக்கள் இந்த சினிமாவைப் பற்றிப் பேசுகிறபோதே, இதில் சொல்லப்படுகிற கார்ப்பரேட் ஆதிக்கம், விவசாய அழிப்பு, ஊடகங் களின் பொறுப்பின்மை போன்றவை பற்றியும் பேசுவார்கள் அல்லவா? அப்படி அவர்கள் பேசுவது, இத் தகைய பிரச்சனைகளுக்காகப் போராட்டக்களத்தில் இறங்கி யிருக்கிற இயக்கங்களுக்கு உதவி யாக இருக்கும். ஒரு திரைப்படத்தால் மாற்றம் ஏற்பட்டுவிடாது, ஆனால் மாற்றத்திற்காகச் செயல்படுவோரின் பணியை எளிதாக்குவதில் இப்படிப் பட்ட படங்களும் பங்களிக்கும்.-

அ. குமரேசன்.
நன்றி: தீக்கதிர்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

www.tamilviduthy.blogspot.in இவ்வாறு கூறியுள்ளார்…
Nice review but mattume sollirikking - nnu ethuvume sollala
www.tamilviduthy.blogspot.in இவ்வாறு கூறியுள்ளார்…
Nice review but mattume sollirikking - nnu ethuvume sollala
Yarlpavanan Kasirajalingam இவ்வாறு கூறியுள்ளார்…
சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்