தமிழ் சினிமா தவறான பாதையில் செல்கிறது.. உயர் நீதிமன்றம் எச்சரிக்கை...


தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா தயாரிக்க வேண்டும் என நீதிபதி விருப்பம் தெரிவித்தார்.

நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை வழக்கறிஞர் வி.ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கத்தி படத்தில் தமிழர் விரோத வசனங்கள் இடம் பெற்றுள்ளன. புலிப்பார்வை படத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளது. இப்படங்கள் தமிழகத்தில் வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
தற்போது வெளியாகும் சினிமாக்களில் பாலியல் சார்ந்த பிரச்சினைகள், காட்டுமிராண்டித்தனமான சண்டைக் காட்சிகள், பெண்களை கேவலமாக சித்தரித்தல், மது குடித்தல் மற்றும் புகைப் பிடித்தல், கெட்ட நடத்தை உள்ளவர்களை நல்லவர்களாக சித்தரிப்பது, குற்றச் செயல்களை நியாயப்படுத்துவது ஆகியன தேவையற்றதாக உள்ளது. சினிமாக்களுக்கு தவறான தலைப்புகள் வைக்கப்படுகின்றன. தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. மொத்தத்தில் தமிழ் சினிமாவில் தவறான அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.
தமிழ் சினிமாவில் இவற்றைத் தவிர்ப்பது குறித்து திரையுலகினர் ஆலோசிக்க வேண்டும். பழைய சினிமாக்களில் அன்பு, பாசம், குடும்ப உறவு முறைகள் வளர்க்கப்பட்டதுபோல், இப்போது தயாரிக்கப்படும் சினிமாக் களிலும் காட்சிகள், கருத்துகள் இடம்பெற வேண்டும். சினிமா பணம் பார்க்கும் தொழிலாக இருந்தாலும், சமூகம் மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் வலிமை சினிமாவுக்கு உண்டு என்பதை மறக்கக்கூடாது.
சினிமா மூலம் அமெரிக்காவில் ரீகன், அர்னால்டு, ஆந்திராவில் என்.டி.ராம ராவ், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆகியோர் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித் துள்ளனர். சமூக பிரச்சினைகள் அடிப் படையில் பராசக்தி, ரத்தத் திலகம், நாடோடி மன்னன், பாசமலர், பாலும் பழமும், நெஞ்சில் ஓர் ஆலயம், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, இந்தியன் போன்ற சினிமாக்கள் எடுக்கப்பட்டன. இப்படங்கள் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
ஆனால், தற்போது தயாரிக்கப்படும் எல்லா படங்களும் சமூகத்துக்கு எதிர் மறையான கருத்துகளை பரப்புவதாக எடுக்கப்படுகின்றன. சினிமா தொழிலில் ஈடுபடுபவர்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய படங்களை தயாரிக்கக்கூடாது.
சென்சார் போர்டு அனுமதி வழங்கிய சினிமாக்களில்கூட மிருகத்தனமான வன்முறை காட்சிகள், ஆயுத கலாசாரக் காட்சிகள், நடு ரோட்டில் கொலை செய்யும் கொடூரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் சென்சார் போர்டு உறுப்பினர்களின் மீதான முறை கேடு புகாரை நிராகரிக்க முடியாது.
சென்சார் போர்டு உறுப்பினர்களாக இருப்பவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவர்களாக இருக்க வேண்டும். சென்சார் போர்டில் நியமனம் செய்யப் படுபவர்கள் அரசியலுக்கு அப்பாற்றப் பட்டு, நேர்மையாக செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். சென்சார் போர்டு சான்று வழங்கிவிட்டால், மறுபரிசீ லனைக்கு அவசியம் இல்லை என்ற ரீதியில் அவர்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.

ஹீரோக்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். சட்ட விரோத செயல்கள் மற்றும் அதர்ம செயல்களில் வெற்றி பெறுவது போன்ற காட்சிகள் இருக்கக்கூடாது. எதிர்மறை யான தலைப்புகள், எதிர்மறைவான கதாபாத்திரங்கள், கருத்துகள் இருக்கக்கூடாது, சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகளும் இருக்கக்கூடாது.
நாகரிகம், தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா இருக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
நீதிபதி சொல்லிட்டார்...நம்ம  தமிழ்சினிமா மாறுமா? அப்படியே நல்ல படங்கள் வந்தாலும் நம்ம மக்கள் ஆதரவு கொடுப்பாங்களா?

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments