28 ஜூலை, 2014

மோடி வாய் மூடி இருப்பது ஏன்?


முஸ்லிம்களுக்கு எதிரானவை என்று கருதப்படும் சம்பவங்கள் குறித்து நாட்டின் புதிய பிரதமர்நரேந்திர மோடி வாய் மூடி மௌனம் காத்து வருகிறார். நரசிம்ம ராவ் போபர்ஸ் ஊழல் குறித்தும், மன்மோகன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் குறித்தும் மௌனம்காத்தது போல் மோடி மதவன்முறைகள், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மௌனம் சாதித்து வருகிறார். .
 ஆட்சிஅமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைத்தவுடன், பிற மதங்களை சிறுமைப்படுத்த அனுமதி கிடைத்துவிட்டது போல் இந்து மத தீவிரவாதிகள் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
புதுதில்லி மகாராஷ்டிரா சதனில் ரம்ஜான் நோன்பிருந்தமுஸ்லிம் ஊழியரின் வாய்க்குள் ஒரு சிவசேனா மக்களவை உறுப்பினர் ராஜவ் விக்காரே சப்பாத்தியைத் திணிக்கும் காட்சி தொலைக்காட்சி ஊடகங்களில் காட்டப்பட்டது. சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட பதிவுகள் காட்சி ஊடகங்களிடம் இருந்த போதும், அச்சு ஊடகங்கள் ஓரிரு தினங்களுக்குப் பின் செய்தி வெளியிட்ட பின்னரே காட்சி ஊடகங்களில் இச்சம்பவம் காட்டப்பட்டது.

மற்றோரு சம்பவத்தில் பாஜக அரசியல்வாதி லட்சுமணன் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் இந்திய அடையாளம் குறித்துகேள்வி எழுப்பினார்.
சானியாமிர்சா தெலுங்கானா மாநிலத்தின் மேம்பாட்டு தூதராக நியமிக்கப்பட்டதற்கு அவர் பாகிஸ்தானின் மருமகளை நியமிப்பது முறையற்றது என்று கூறினார். தொலைக்காட்சி பேட்டியில் எத்தனைமுறைதான் தன்னுடைய இந்தியத் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க கூறினார்.வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர்களை அரவணைக்கத் தயாராகவிருக்கும் பாஜகவினர் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை சிறுமைப்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மோடியின்  மௌனம் இப்படிப்பட்டவர்களை ஊக்கவிக்கவே செய்யும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா உலகில் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் மூன்றாவது நாடு என்பதை இவர்கள் மறந்து விடக்கூடாது. இந்தியாவில் 15 கோடி முஸ்லிம்கள் வாழுகின்றனர். ஆனால் மோடிக்கு வேறு முகமும் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது. இந்து மதவெறிக்கும்பல் வன்முறையாட்டத்தில் முஸ்லிம்களை கொலை செய்த குஜராத் கலவரங்களில் தனது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் முஸ்லிம்களுக்கு ஆதாரவு அளிக்கும் வகையில் பேசுவார் என்று எதிர்பார்ப்பது தவறு.

வன்முறை மூலமே ஆட்சியை பிடிக்கும் பாஜக

 மக்களவை தேர்தலுக்கு முன்பு உத்தபிரதேசம் முசாபர் நகரில் 60 இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்ட மதவெறி வன்முறையைத் தொடர்ந்து மேற்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்துடன் வெற்றிபெற்றது. மதவெறி வன்முறையை அரங்கேற்றியதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தைச்சேர்ந்த மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து  அக்கட்சி வெற்றிபெற்றது. தற்போதும் அதே போல சஹரான்பூர் உட்பட மேற்கு உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து மதவெறி வன்முறைகளும் கலவரமும் ஏற்படுவதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவையே காரணம் என்று உத்தரப்பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதிக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மோடியிடம் நிறைய எதிர்பாத்தோம்... ஆனால் அவர் வாய் மூடி இருக்கிறாரே என்ன செய்ய?..

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...