15 ஜூன், 2014

முண்டாசுப்பட்டி - புதியகளம்

புதிய களம், கதைகளோடு தமிழ் சினிமாக்கள் வரதொடங்கியிருப்பது நல்ல அம்சம். அதில் முண்டாசுப்பட்டி  கூடுதலாக வானத்திலிருந்து விழுந்த எரிகல், புகைப்படம் எடுப்பதால் இறந்து போவோம் என நம்புகிற கிராமத்து மக்கள். எப்போதும் தலையில் முண்டாசுகட்டிய படியே திருகிற ஆண்கள்.... 1947 மற்றும் 1983 ஆண்டுகளில் நடப்பதாக பிண்ணப்பட்டுள்ள கதை...கதையோடு இணைந்த காமடி காட்சிகள் என படம் சலிப்புதட்டாமல் போகிறது.... சுருக்கமாக கதை...

1947-ம் வருடம் முண்டாசுப்பட்டி என்கிற கிராமத்துக்கு வெள்ளைக்காரர் ஒருவர் வருகிறார். அவர் அங்கு வாழும் மக்களை  போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார். அவர் சென்றதும், அந்த ஊர் மக்கள் பலர் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். வெள்ளைக்காரர் போட்டோ எடுத்ததால்தான் அனைவரும் இறந்துபோகின்றனர் என என்ணி அன்றுமுதல் அந்த ஊருக்குள் யாரும் வந்து போட்டோ எடுப்பதையே தவிர்க்கின்றனர்.

இந்நிலையில், அந்த ஊர் மக்கள் குலதெய்வமாக வழிபடும் சாமி சிலையை திருட்டு கும்பல் ஒன்று களவாட வருகிறது. அவர்கள் அந்த சிலையை திருடிவிட்டு செல்லும்வேளையில் ஊர்மக்கள் அவர்களை சுற்றி வளைக்கின்றனர். அப்போது, வானத்தில் இருந்து ஒரு எரிகல் பூமியில் விழுந்து இவர்கள் குலதெய்வமாக வழிபடும் சாமி சிலை இருந்த இடத்தில் வந்து உட்காருகிறது.
அதைப் பார்த்ததும் கொள்ளைக் கும்பல் தலைதெறிக்க ஓடிவிடுகிறது. நம்முடைய குலதெய்வம்தான் வானத்தில் இருந்து வந்து அந்த இடத்தில் கல்லாக உட்கார்ந்திருக்கிறது என்று எண்ணி அன்றுமுதல் அந்த கல்லை தெய்வமாக வணங்கி வருகின்றனர். அன்றை தேதியிலிருந்து அந்த ஊரில் நோய், நொடி எல்லாம் பறந்து போகிறது.

இதற்கிடையில், எரிகல் விழுந்ததை அறிந்த வெள்ளைக்காரர் மறுபடியும் முண்டாசுப்பட்டிக்கு வருகிறார். அவரை அந்த ஊர்மக்கள் மறுபடியும் போட்டோ எடுக்கத்தான் வந்திருக்கிறார் என்று நினைத்து அவரை அடித்து விரட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்லும் வெள்ளைக்காரர், போகும்போது அந்த எரிகல்லின் ஒரு சிறுதுகளை எடுத்துப் போகிறார்.

அதைக் கொண்டுபோய் ஆராய்ச்சி செய்கிறார். அவருடைய ஆராய்ச்சியில் அந்த கல்லில் ஒருவிதமான அமிலம் இருப்பதை அறிகிறார். அந்த கல் விலைமதிக்க முடியாதது என கண்டறிகிறார்.

 1983 காலகட்டத்திற்கு கதை நகர்கிறது. ....

போட்டோக் கடை வைத்திருக்கும் நாயகன் விஷ்ணுவுக்கு ஒருநாள் பள்ளிக்கூடத்தில் குரூப் போட்டோ எடுக்கவேண்டும் என்ற ஆர்டர் வருகிறது. தனது நண்பன் காளியுடன் அங்கு போகும் விஷ்ணு, 12-ஆம் வகுப்பு படிக்கும் நாயகி நந்திதாவை பார்க்கிறான்.

சிறுவயது முதலே போட்டோ என்றால் அலர்ஜியாக இருக்கும் நந்திதா குரூப் போட்டோவுக்கு வராமல் வகுப்பறையிலேயே தனியாக இருக்கிறாள். அவளிடம் சென்று விசாரிக்கும் விஷ்ணுவிடம் சாக்கு போக்கு சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் தப்பிக்கிறாள் நாயகி.

போட்டோ எடுத்து முடித்து மறுநாள் பிரிண்ட் போட்டு பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வரும் விஷ்ணு, அங்கு நாயகி நந்திதா இல்லாததை காண்கிறான். அவளுக்கு திருமணம் ஆகப்போகிறது. அதனால்தான் அவள் பள்ளிக்கு வரவில்லை என தோழிகள் சொல்வதை கேட்கும் விஷ்ணு அவளை பிரிந்த வேதனையில் துடிக்கிறான்.

இந்நிலையில், முண்டாசுப்பட்டி கிராமத்தில் இருந்து வரும் பெரியவர் ஒருவர், தங்கள் ஊர் தலைவர் இறக்கும் தருவாயில் இருப்பதால் அவரை போட்டோ எடுக்க வரும்படி விஷ்ணுவுடன் கேட்கிறார். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறோம் என்று ஆசை காட்டுகிறார்.

பணத்திற்கு ஆசைப்பட்டு விஷ்ணுவும் அதற்கு ஒப்புக்கொண்டு தன் நண்பன் காளியுடன் முண்டாசுப்பட்டி கிராமத்துக்கு வருகிறார். அங்கு நாயகி நந்திதாவை பார்க்கும் விஷ்ணு, அவள்தான் இறக்கப் போகும் ஊர் தலைவரின் பேத்தி என்பதையும் அறிகிறான்.

ஊர் தலைவர் இறந்தபிறகுதான் அவரை போட்டோ எடுக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள் ஊர் மக்கள். இதனால், அந்த ஊரிலேயே விஷ்ணுவும், காளியும் தங்குகின்றனர். இதற்கிடையில், விஷ்ணு தனது காதலை நந்திதாவிடம் சொல்கிறார். ஆனால் நந்திதாவே அதை ஏற்க மறுக்கிறாள். இருந்தும் அவளை ஒருதலையாக காதலித்து வருகிறார் விஷ்ணு.


ஒருநாள் நந்திதாவின் தாத்தா இறந்து போய்விடுகிறார். அவரை போட்டோ எடுத்துவிட்டு ஊருக்கு போகும் விஷ்ணு, அந்த போட்டோவை பிரிண்ட் போடுகிறார். ஆனால், அந்த போட்டோவில் நந்திதாவின் தாத்தா முகம் விழவில்லை.
என்ன செய்வதென்று முழித்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவுக்கு, தன்னுடைய போட்டோ கடைக்கு அடிக்கடி வந்துபோகும் முனீஸ்காந்த் நினைவு வருகிறது. அச்சு அசல் அந்த ஊர் தலைவர் போன்ற தோற்றத்தில் இருக்கும் முனீஸ்காந்திடம் படத்தில் நடிக்க ஆள் தேவை என ஆசை வார்த்தை கூறி, அவனை போட்டோ எடுத்து நந்திதாவின் வீட்டாரிடம் கொண்டுபோய் கொடுக்கிறார்.
அதைப் பார்த்ததும் சந்தோஷமடையும் நந்திதாவின் வீட்டார், சாப்பிட்டு விட்டு போகும்படி கூறுகின்றனர். அப்போது, அங்கு வரும் முனீஸ்காந்தை பார்த்ததும் விஷ்ணுவும், காளியும் அதிர்ச்சியாகிறார்கள். அவர்தான் இறந்துபோன ஊர் தலைவரின் தம்பி மகன் என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது.
இதன்பின்னர், அவர்கள் இருவரும் முனீஸ்காந்திடம் மாட்டிக் கொண்டார்களா? அல்லது தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் விஷ்ணு,காளி,நந்திதா,மூனிஸ்காந்தாக வரும் ராம்தாஸ் முண்டாசு பட்டி கிராமத்து மக்கள்.... யாதார்தமாக நடித்து படத்தை கலகலப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். முண்டாசுப்பட்டி பார்க்க வேண்டியபடம்.

-செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...