12 மார்., 2014

ஆட்டம் காணும் மோடியின் அஸ்திவாரம்

குஜராத்தில் மோடியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பங்கேற்றனர். இதனால் பாஜக தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நாடெங்கும் மோடி அலை வீசி வருகிறது. குஜராத்தில் மோடி தலைமையிலான நிர்வாகம் மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கிறது.
இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடியை தேர்வு செய்ய பாஜகவிற்கு வாக்களியுங்கள் என பாஜகவும் அதன் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடியும் இடைவிடாமல் கூவி வருகின்றனர். ஒரு தொகுதியில் மோடி போட்டியிட்டு அந்த தொகுதி மக்கள் காலை வாரிவிட்டால் மோடியின் பிரதமர் கனவு மண்ணாகி விடுமே என்ற பயமும் கூடவே இருந்து வருகிறது. அதனாலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட செய்யலாமா என திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே, அவருக்கு ஒதுக்குவதற்காக எண்ணப்பட்டிருந்த வாரணாசி தொகுதியை விட்டுக்கொடுக்க கட்சியின் மூத்த தலைவர் ஜோஷி முரண்டு பிடிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்நிலையில், குஜராத்தின் உண்மையான வளர்ச்சியை நேரில் ஆய்வு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டமும் நடத்தினார். அவரை பல இடங்களுக்குச் செல்ல விடாமல் போலீசார் தடுத்துள்ளனர். ஆம்ஆத்மி கூட்டத்திற்கு செல்பவர்கள் சங் பரிவார் அமைப்புகளால் மிரட்டப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் மிரட்டலையும் மீறி குஜராத்தின் தலைநகர் அகமதாபாத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து மோடிக்கெதிரான தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.


நாட்டில் ஊழல்வாதிகளுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் ஆதரவாக இருந்து வரும் காங்கிரஸ், பாஜகவிற்கு எதிராக கெஜ்ரிவால் பேசி வருவது மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ், பாஜகவிற்கும், ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்கும் இடையே என்ன உறவு என்பதை மக்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். சலுகைசார் முதலாளித்துவத்தின் பிரதிநிதியா என மோடிக்கும், ராகுல் காந்திக்கும் கெஜ்ரிவால் எழுதிய கடிதங்களுக்கு இன்றுவரை இருவரும் பதிலளிக்கவில்லை. ஏன்? சாதாரண டீ விற்பனையாளராக இருந்தவருக்கு நாடுமுழுவதும் பறந்து சென்று பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டர்கள் கிடைத்தது எப்படி என்று மோடிக்கும், அதானி, அம்பானிக்கும் இடையேயான உறவை அம்பலப்படுத்தும் கெஜ்ரிவாலின் பேச்சு குஜராத் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

நரேந்திர மோடியின் தொகுதியான மணிநகருக்கு சென்ற கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். பாபுநகரில் நடைபெறும் பேரணியில் 2 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே கலந்து கொள்வார்கள் என்று மாநில உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்தது. இதனை பொய்யாக்கும் வகையில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ், பாஜகவிற்கு மாற்று உருவாக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இதையெல்லாம் கார்ப்பரேட் ஊடகங்கள் செய்திகளாக வெளியிடவில்லை. மோடிக்கு ஆதரவாகவே இருட்டடிப்பு செய்து வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் மோடியின் கோட்டை என்று பாஜகவினர் கூறிக் கொண்டிருக்கும் குஜராத்தின் அஸ்திவாரத்தை கெஜ்ரிவால் ஆட்டம் காண வைத்துள்ளார்.

சொந்த மாநிலத்திலேயே மோடிக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.மொத்தத்தில், குஜராத்தில் பல ஆண்டுகளாக ஆட்சிபுரிந்து வரும் மோடியின் அரசு, ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், தொழிலாளர்கள், பணியாளர்கள், சிறு மற்றும் பெட்டிக்கடை வியாபாரிகள் போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு அளித்த இன்னல்களின் வளர்ச்சியால் அடைந்த அதிருப்தியே இந்தக்கூட்டம் என நிருபித்திருக்கிறது.

-தொகுப்பு செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...