9025241999 - இந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...

தகவல் தொடர்புத்துறை அமைச்சராக, நிதியமைச்சராக, பிரதமராக இருந்தவர்... ஐநா சபையில் இரண்டு முறை பேசியவர். மன்மோகன்சிங், சிதம்பரம் ..... நீங்கள் யார்,யாரையோ கற்பனை செய்து பார்த்திருக்கலாம். ஆனால் இவர்களில் யாருமில்லை... சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுவர்ணலட்சுமி தான் அவர். சுவர்ணலட்சுமியை பார்வையற்றவர் என்று அடைபடுத்த வேண்டிய அவசியமேயில்லை.
அவரது செயல்பாடுகள், சேவைகள், திறமையான நடவடிக்கைகள் பிரமிக்க வைப்பன. அரிது அரிது..மானிடராய் பிறப்பதரிது...அதனினும் கூன்,குருடு இன்றி பிறப்பதறிது என திருவிளையாடல் படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடுவார்,அப்படி அரிய வாழ்க்கை கிடைத்த சிலர், தீவிரவாதிகளாய், சமூகவிரேதிகளாய்,நடைபிணங்களாய் திருகின்ற போது சுவர்ணலட்சுமி பிரமிக்க வைக்கிறார்.
                       பலருக்கும் பாடமாக இருக்கட்டுமே என்பதற்காகவே சுவர்ணலட்சுமியின் திறமைகளோடு பார்வையற்றவர் என்பதையும் சொல்லவேண்டிய அவசியம் வருகிறது.

துவண்டு போகாத பொற்றோர்....

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.
சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.
சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்
பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.

ஊழல் கரைபடியாத குழந்தைகள் பார்லிமெண்ட்...

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது குறிப்பாக ஊழல் கிடையாது... எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.
இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமே வைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.
குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.
அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.
இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

ஒருமுறையல்ல இருமுறை ஐநா சென்றவர்...

நகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டாலே நம்மவர்களின்  அலப்பர தாங்காது. ஜநா சபைக்கு ஒரு முறையல்ல இரு முறை சென்று பேசிவிட்டு வந்திருக்கிறார் சுவர்ணலட்சுமி... அவரது குழுந்தைகள் பாராளுமன்ற செயல்பாடுகளால் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் ....

ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்'ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. 'எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்' என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்குகிறார் சுவர்ணலட்சுமி. ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.கட்டுரையின் துவக்கத்தில் உள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டு சுவர்ணலட்சுமிக்கு வாழ்த்தையாவது தெவிக்கலாமே.

அரிது... அரிது சுவர்ணலட்சுமியாக பிறப்பதரிது...

தொகுப்பு...
-செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Samy said…
An article with hope. Sathi
ராஜி said…
சுவர்ணலட்சுமிக்கு வாழ்த்துகள்
  • இலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில்  ஒரு கோயில்
    12.03.2018 - 5 Comments
    எம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை…
  • facebook அரசியல் நகைச்சுவைகள்
    22.06.2012 - 1 Comments
    இந்திய ஜனதிபதி தேர்தலில் நடக்கும் அரசியல் பேரம், ஒருநாளைக்கு ரூ.32 இருந்தாலே வறுமைக்கோட்டை தாண்டியவர் என்ற…
  • ''அம்மா''க்கள் தின சிறப்பு புகைப்படங்கள்...
    11.05.2014 - 1 Comments
    மே.11 அம்மாக்கள் தினம் (mothers day) உலகமுழுவதும் கொண்டாடப்படுகிறது. வாழும் தெய்வங்களாக மதிக்கப்படுகிற…
  •  மாமதுரையை போற்ற மதுரைக்கு வாங்க....
    02.02.2013 - 1 Comments
    கொலைகள், வன்முறை மிகுந்த நகரம் என்ற பார்வை மதுரை பற்றி இருக்கிறது. உண்மைதான்... அரசியல் கொலைகள், சாதிய…
  • பெருமாள் முருகன் செய்த  மூன்று தவறுகள்.......
    21.01.2015 - 3 Comments
    பெருமாள் முருகன் விவகாரம்.... இன்றைக்கு இந்திய அளவில் விவாதிக்கப்படும்  சர்சைகளில் ஒன்றாக…