17 ஜூன், 2013

பட்டாணிச்செடியும்... இந்திய சினிமாவின் பயணப்பாதையும்...

தனது வீட்டு பின்புறத்தில் பட்டாணி விதையை நட்டு வைத்தான் ஒரு இளைஞன்.பட்டாணி விதை மண்ணை துளைத்துக் கொண்டு வளரத்துவங்கியது. இளைஞன் படமெடுத்து கொண்டான். அடுத்த நாள்  சற்று பசுமையான தண்டுகளை கொண்டு வெளிவர அதனையும் படமெடுத்து கொண்டான்.  பட்டாணிச்செடி முழுமையான செடியாக மாறும் வரை படம் மெடுத்துக்கொண்டான். எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு ''பட்டாணிச்செடியின் பிறப்பு'' என்ற இந்தியாவின் முதல் ஆவணபடம்(1912) தயாரானது. படம் மெடுத்த அந்த இளைஞன் தான் இந்தியாவின் முதல் சினிமாவை உருவாக்கிய தாதாசகோப் பால்கே.

பொய்யே பேசாத அரசனின் கதை....  
           
                                      நாடகம், நடனம், பாட்டு, இசை, நாட்டார்கூத்து போன்ற கலைகளின் தாயகமாக விளங்கிய இந்தியாவில் இவற்றையெல்லாம் தனதாக்கிக் கொண்டு இந்திய சினிமா வளர்ச்சியடை தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1913ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் பம்பாய் காரனேஷன் சினிமா திரையரங்கில் ''ராஜாஹரிச்சந்திரா'' வெளியானது. ''பொய்யே பேசத அரசனின் கதை''யை பேசாப்படம் மூலமாக எடுத்திருந்தார் இந்திய சினிமாவின் பிதாமகர் தாதாசாகேப் பால்கே. வெள்ளைத்திரையில் புகைப்படம் அசைவதை,ஒடி,ஆடி நடிப்பதை, தங்களைப்போலவே எல்லாவிதத்திலும் சலனிப்தை முதன் முதலாக பார்த்த மக்கள் அதிசயத்து போயினர்.பெரும் திரளாக கூடி படத்தின் வெளியீட்டு நிகழ்வையே ஒரு திருவிழா போல ஆக்கிவிட்டனர்.
                இந்திய சினிமாவின் துவக்கம் குறித்து மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன.1912ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி , ராஜாஹரிச்சந்திரா வெளிவருவதற்கு ஓராண்டு முன்பாக ''பாண்டாலிக்'' என்ற 22 நிமிடம்,1500 அடிகள் கொண்ட மௌனத்திரைபடம் தான் முதல் சினிமா என்கிறார்கள்.இந்த படமும் அதே காரனேசன் திரையங்கில் தான் வெளியிடப்பட்டது. இதற்கு முதல் படதகுதியை வழங்க முடியாது என்கிறார்கள் சிலர் . இது சினிமாவே அல்ல,ஒரு மாராத்தி நாடகத்தின் புகைப்பட தொகுப்புதான் என்கிறார்கள்.


                 

  கதாநாயகன் தெலுங்கு,நாயகி தமிழ் பேசிய படம்

எப்படி அரசியல்,பூலோக தன்மையில் வடக்கு, தெற்கு என்று மாறுபாடு இருக்கிறதோ அதே போல இந்திய சினிமாவில் இந்தி சினிமாவுக்கு நிகராக தென்னிந்தியாவில் சினிமா வளச்சியடை துவங்கியது. இந்திய சினிமாவில் முக்கியபங்காற்றி வருகிற தமிழ்சினிமாவுக்கு 1897 களிலேயே, அதாவது பால்கேயின் படம் வெளிவருவதற்கு முன்னதாகவே எட்வர்ட் என்பவர் மூலமாக சினிமா கலை குறித்த அறிமுகம் கிடைத்திருந்தது.தென்னந்தியாவின் முதல் தியோட்டர் கெயிட்டியை சென்னையில் வெங்கையா என்பவர் கட்டினார்.தென்னிந்தியாவின் முதல் மௌனப்படம் ''கீசகவதம்'' வேலூர் நடராஜ முதலியார், தர்மலிங்க முதலியார் தாயாரிப்பில் வெளிவந்தது. 1930 ம் ஆண்டு ஹர்தேஷ் இராணி என்பவர் ''ஆலம் ஆரா'' என்ற பெயரில்  இந்தியாவின் முதல் பேசும் படத்தை தயாரித்தார். அவரே 1931 ம் ஆண்டு  தமிழில் ''காளிதாஸ்'' என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் கதாநாயகன் தெலுங்கிலும், கதாநாயகி தமிழிலும், சில கதாபாத்திரங்கள் ஹிந்தியிலும் பேசினார்கள். இந்த படத்தை தான் தமிழ் சினிமா தனது தொடக்க கால சினிமாவாக பாவித்துக்கொண்டது.

இந்திய சினிமா பயணப்பாதையில் சில....

 உலக சினிமா எதையெல்லாம் சாதிக்கிறதோ அதையெல்லாம் நாமும் காலம் தாழ்த்தாமல் தமதாக்கி கொண்டிருக்கிறோம்.மௌனப்படம்,ஒலிப்படம், வண்ணப்படம்,சினிமாஸ்கோப்,ஸ்டிரியோ போனிக் ஒலி, 3டி,டிஜிடல் எல்லாவற்றையும் நமது சினிமா பாணிக்கு கேற்ப மாற்றி பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். அதிகப்படங்களை தயாரிப்பதில் உலகின் முதலிடத்தை பிடித்திருப்பது இந்திய சினிமாதான். எல்லா இந்திய மொழிகளிலுமாக சேர்த்து வருடத்திற்கு 1000 க்கு மேற்பட்ட படங்கள் வெளிவருகின்றன. அதிகமாக பணம் புழங்குகிற மிகப்பெரிய வியாபாரமாக மாறியிருக்கிறது. இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற மிகமுக்கிய அடையாளமாக இத்திய சினிமா பரிணமித்திருக்கிறது.

100 ஆண்டுகளுக்கு முன் பால்கே தொடங்கி வைத்த பயணம் இன்று மிகப்பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. இன்று இந்திய சினிமா  அதிக படங்களை தயாரிப்பது மட்டுமல்ல உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் இயக்குனர்களை கொண்டுள்ளது. சத்யஜித்ரே,மிருணாள்சென்,ரித்விக் கட்டாக், கிரஷ்காசரவல்லி, சியாம்பெனகல், அடுர்கோபாலகிருஷ்ணன், ஜி.அரவிந்தன், தமிழகத்தை சேர்ந்த மணிரத்னம் போன்றவகளின் மாறுபட்ட பங்களிப்பினால் இந்திய சினிமா தொட்டிருக்கும் உயரங்கள் அதிகம். உலகின் 100 சிறந்த திரைப்படங்களில் கமல்ஹாசனின் நடித்து, மணிரத்னம் இயக்கிய படம் இடம்பிடித்துள்ளது. மேலும் உலகின் 25 விளையாட்டு திரைப்படங்களில் அமீர்கான் நடித்த லகான் இருப்பது இந்திய சினிமா தொட்ட சிகரங்களில் சில.இசைக்காக ரகுமான் பெற்ற ஆஸ்கார் விருதுகள்....

சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டும் தானா?....

சினிமா பற்றிய இருவேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.சினிமா  ஒரு பாவகாரமான தொழில் நுட்பம் என்கிறார்  காந்தி. ஜந்து பாவங்கங்களில் ஒன்று என்கிறார் பெரியார்.  சினிமாவை வெறும் பொழுது போக்கு அம்சாமாக மட்டுமே கையாளுகிறோம், நல்ல கலைவடிவமாக, கருத்து ஊடகமாக  பயன்படுத்துவதில்லை என இந்திய சினிமா பற்றி குற்றச்சாட்டு உண்டு . இதில் உண்மை இல்லாமல் இல்லை தனிமனித துதிபாடல்,வன்முறைகள், மனிதநேயம் மற்ற போக்கு , தவறான  மனித தொடர்புகள், மதம்,சாதிய போற்றுதல்கள், தவறான அரசியல் வழிகாட்டுதல்கள், என ஆபத்தம் நிறைந்ததாகவே பெரும்பாலன சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த போக்கில் நிறைய மாற்றங்களும் தெரிய துவங்கியிருப்பதையும் பார்க்கலாம். அங்காடித்தெரு, ஆரவான்,பரதேசி, வழக்கு எண்18/9 போன்ற சினிமாக்களும், இயக்குனர்களும் நம்பிக்கையளிப்பவை.
இரான்நாட்டின் இயக்குனர் ஜபார்பனாகி, கல்வி உரிமை,பெண்களுக்கு எதிரான பிற்போக்குதனத்திற்கு சினிமா எடுத்ததால் 6ஆண்டு சிறை,20 வருடங்களுக்கு சினிமா எடுக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சினிமாவை வெறும் பொழுது போக்கு சாதனம் என  என்று புறந்தள்ளிவிட முடியாது. மக்களிடம் கருத்துக்களை விரைவாக பரப்புகிற ஊடகம், அதை சரியாக  பயன்படுத்த வேண்டியது நல்ல இயக்குனரின் பணி. சினிமா வேறும் பொழுபோக்கு சாதனமாக மட்டும் பயன்படுத்தாமல் சமூக மாற்றத்திற்கான கருவியாக பயன்படுத்தி சினிமா தனது பயணத்தை தொடர வாழ்த்துவோம்


.-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...