22 பிப்., 2013

பெண்கள் படிக்க வேண்டாம்... ஆண்களுக்கு மட்டும்


பெண்கள் படிக்க கூடாத பதிவு... பெண்கள் மட்டும் போல ஆண்களுக்கு மட்டும். அவள்விகடன், குமுதம் சினேகிதி போன்ற பெண்களுக்கென சிறப்பு வார,மாத இதழ்கள் வெளிவருவது போல ஆண்களுக்கு இல்லை. அந்த குறையை நிறைசெய்யும் விதமாக இந்த பதிவு. மேற்கண்ட வார,மாத இதழ்களில் அதிகமாக இடம் பெறுவது பெண்களுக்கான அழகு குறிப்புகள் மட்டுமே. முன்பெல்லாம் தமிழகத்தை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகு யாரும் அழுகு குறித்து  அக்கரை காட்டமாட்டார்கள். தற்போது பெண்கள் மாறிவிட்டார்கள், குறைந்தது 50 வயது வரை தங்கள் அழகு குறித்து அக்கரையாக இருக்கிறார்கள். ஆண்கள் தங்கள் தோற்றும் குறித்து எப்போதுமே கவலைபட்டதில்லை. அப்படிபட்டவர்களுக்காக.....

ஆண்களில் சிலரை உற்று நோக்கினால் 50 அல்லது 60 வயதை தாண்டியவர்கள் கூட என்றும் இளமையுடன் மார்க்கண்டேயன் போல் தோற்றமளிப்பார்கள். என்றும் 16 வயது இளமையுடன் தோற்றமளிக்க வேண்டும் என்றால் ஆண்களுக்கான சில டிப்ஸ் இதோ...
பொதுவாக ஆண்களின் வயதை வெளிப்படுத்துவது சருமம்தான். அதனை சிறப்பாக பராமரித்தாலே ஆயுட்காலம் நீடித்து இளமையான தோற்றத்துடன் திகழ முடியும். அதிகளவு சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், எண்ணை அதிகமுள்ள உணவுப் பொருட்கள் உட்கொள்வதாலும், மாசுள்ள காற்றினை சுவாசிப்பதாலும் சருமம் முதுமை தோற்றத்தை அடைகிறது.

இதனை தடுத்திட சிறப்பான முதுமை தடுப்பு கிரீம்களை பயன்படுத்துவது பலனளிக்கும். இதே போல் அதிகமாக தண்ணீர் பருகுதல், சருமத்தை பாதுகாக்கும். தினந்தோறும் பழங்களை உண்பது சருமத்தை மெருகேற்றிடும்.
பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 சதவீதம் கூடுதல் கடினத் தன்மை கொண்டது. வயது அதிகரித்திடும் போது கொலோஜன் எனும் புரதச் சத்து குறைவதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. உடற்கூறு இயலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களின் முதிர்ச்சி சில காலம் கழித்துத்தான் தோன்றிடும். ஆனால் சில பழக்க வழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.

தொடர்ந்து தினந்தோறும் சவரம் செய்வதனாலும் முகத்தில் முதிர்ச்சி தோன்றும். அதனால் நல்ல ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீம்களை பயன்படுத்துவது நல்லது. மேலம் முகச்சவரம் செய்யும் போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் சவரம் செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் காணப்படும். என்றும் இளமையுடன் திகழ்ந்திட தொடர்ச்சியான உடற்பயிற்சியும், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானங்கள், உணவு வகைகள் உண்ண வேண்டும்.

 உடலில் உள்ள திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆண்டிஆக்ஸிடென்ட் குணம் நிறைந்த பேக்கிங் செய்யப்பட்ட உணவு உட்கொண்டால் முகம் சுருக்கும் இல்லாமல் பொலிவுடன் காணப்படும். அதே போல் பசலிக்கீரை, நெல்லிக்காய், கேரட், தக்காளி, பச்சை தேனீர்(கிரீன் டீ) போன்றவற்றை அன்றாடம் சேர்த்துக் கொள்வது அவசியம்.
சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும். சிகரெட்டில் உள்ள நிகோடின் நச்சு உடலின் ரத்த ஓட்டத்தை தடுப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் உடலுக்கு செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் உடல் சுருக்கங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இரவு நீண்ட நேரம் முழித்திருப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. இரவில் குறைந்தது 7 - 8 மணி நேர ஆழ்ந்த உரக்கம் அவசியம். இந்த பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் மனதிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் சருமத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். இதே போல் தாம்பத்ய உறவிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அது பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை.


அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், கோபப்படுதல், சோர்வுடன் இருத்தல், கவலையுடன் காணப்படுதல், மன நிம்மதியின்றி அலைதல், போன்ற காரணங்களும் ஆண்களுக்கு முதுமையை வாரி வழங்கும் வள்ளல்களாக உள்ளது. மனதை கட்டுப்படுத்திட தியானம், உடலை நிலைப்படுத்திட எளிய உடற்பயிற்சி, டென்சனை குறைத்து குணத்தை மேம்படுத்துதல், உடலை தூய்மையாக வைத்திருத்தல், முறையான உணவு பழக்க வழக்கம் போன்றவையே முதுமைக்கு விடை கொடுக்கும் முக்கிய காரணிகளாகும். இவையனைத்திற்கும் மேலாக ஆண்கள் தங்களின் கவலைகளை கப்பலேற்றி அனுப்பி வைத்து விட்டு மகிழ்ச்சியுடன் சிரித்த முகத்துடன் இருந்தாலே முகத்தில் இளமையும், பொலிவும் கூடிக் கொண்டே போகும் என்பது நிஜம்.
இன்முகத்துடன் இருப்போம்
இளமையுடன் வாழ்வோம்

செல்வராஜ்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...