புகைப்படச் செய்தியாளர்’ தேசிய விருது வென்ற தமிழன்


தண்ணீரோ, மின்சாரமோ... தமிழகத்துக்கு எதிரான டில்லியின் அநீதி போக்கு தடையின்றி தொடரத்தான் செய்கிறது. இத்தாலி கப்பலை நோக்கி அத்துமீறிச் சென்ற கேரள மீனவர்கள் சுடப்பட்ட போது, துடிதுடித்துக் களமிறங்கி கப்பலைக் கட்டி இழுத்து வந்து நியாயம் கேட்டது மத்திய அரசு. ஆனால், தமிழக மீனவர்கள் அன்றாடம் சுடப்படுகிற, தாக்கப்படுகிற, சிறைபிடிக்கப்படுகிற சம்பவங்களின் போது வாய்பொத்தி மவுனம் சாதிக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் விரோதப்போக்கு இன்று, நேற்றல்ல... இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம்தொட்டே நீடிக்கிறது.
இதன் விளைவாக, ஒப்பீட்டளவில் பிற மாநிலத்தவரை விடவும் தகுதியும், திறமையும் மிக அதிகம் கொண்ட தமிழக இளைஞர்கள், கலைஞர்கள், நிபுணர்கள் கூட தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெறமுடியாமல் இன்றளவும் ஒதுக்கி வைக்கப்படும் அவலத்தை தமிழகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

தடைகளை எல்லாம் தாண்டிக் கடந்து, டில்லியில் தடம் பதித்து சாதித்த தமிழர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. குறிப்பாக, பத்திரிகைத்துறையில் டில்லியைத் திரும்பிப் பார்க்கச் செய்த தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தக் குறையை போக்கி ஆறுதல் அளித்திருக்கிறார் பத்திரிகை நண்பர் லட்டூர் ரத்தினம் ஷங்கர். ‘நாட்டின் சிறந்த புகைப்படச் செய்தியாளர்’ தேசிய விருதை வென்று டில்லியில் தமிழ்க்கொடி பறக்கச் செய்திருக்கிறார்.


























சிறந்த செய்திப்படத்துக்கான விருதை மத்திய அமைச்சர் மணிஷ் திவாரியிடம் இருந்து பெறுகிறார் லட்டூர் ரத்தினம் ஷங்கர். அருகில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாச்சலய்யா, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ.

விருதுகள் மதிப்பிழந்து கொண்டிருக்கும் காலம் இது. கவர்ச்சி நடிகை கூட
கலைமாமணி விருது பெறமுடிகிறது.
ஆனால், ஷங்கர் வென்றிருக்கும் தேசிய விருது அந்த வகையைச் சார்ந்ததல்ல. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பத்திரிகை ஜாம்பவான்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்த குழுவால் அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் கசப்பான உண்மைகளை, சமூக அவலங்களை ஒரே ஒரு புகைப்படத்தால், உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தமைக்காக சிறந்த செய்திப்படத்துக்கான விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இந்திய பிரஸ் கவுன்சில், இந்த விருதுகளை முதல்முறையாக இந்த ஆண்டு அறிமுகம் செய்திருக்கிறது. அறிமுகம் ஆகும் முதல் ஆண்டிலேயே விருது தேடி வந்திருப்பது கூடுதல் பெருமை. இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி, சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான ஹர்ஷ் மந்தர் ஐ.ஏ.எஸ்., இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் பொலிட்டிகல் எடிட்டர் வினோத் ஷர்மா மற்றும் இந்திய பிரஸ் கவுன்சில் உறுப்பினர்கள் நீரஜ் பாஜ்பாய் (யு.என்.ஐ.,) சந்திப் ஷங்கர் (போட்டோ ஜர்னலிஸ்ட், நயி துனியா) கே.எஸ்.எஸ்.மூர்த்தி (மலையாள மனோரமா) ராஜிவ் சபடே (அசாம் டிரிபியூன்) அருண்குமார் (டைம்ஸ் ஆப் இந்தியா, பாட்னா) உள்ளிட்டோர் அடங்கிய குழு விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்திருக்கிறது.

நவம்பர் 16ம் தேதி, தேசிய பத்திரிகையாளர் தினத்தின் போது, டில்லியில் நடந்த விழாவில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி ஆகியோரிடம் மதிப்பிற்குரிய இந்த விருதை பெற்றுத் திரும்பியிருக்கும் லட்டூர் ரத்தினம் ஷங்கர், டைம்ஸ் ஆப் இந்தியா (சென்னை) நாளிதழில் தலைமை புகைப்படக்காரராக பணிபுரிகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு வடஇந்திய வாலிபரை மனிதநேயம் இல்லாத ஒரு கும்பல் ‘துவைத்து’ எடுத்து இழுத்துச் செல்லும் காட்சியை அவர் படமாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் பதிவு செய்த விதம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பின்விளைவாக, அந்த கும்பல் மீது போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுத்தது. தனிநபர் மனித உரிமை மீறல் அவலத்தை அப்பட்டமாக பிரதிபலித்த இந்தப்படம், அவருக்கு தேசிய விருதை தேடித் தந்திருக்கிறது.

விருது பெற்றுத் தந்த புகைப்படம் குறித்து ஷங்கரே சொல்கிறார்...

‘‘சென்னை அருகே பள்ளிக்கருணை என்ற இடத்தில் 34 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சதுப்பு நிலம் இருக்கிறது. அங்கு சென்னை மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டி வந்தனர். இதனால் அந்த சதுப்பு நிலப்பகுதி முழுவதும் குப்பைக்காடாக காட்சி அளிக்கிறது. இப்போது அதில் 400 ஏக்கர் மட்டுமே எஞ்சியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நாங்கள் அதனை புகைப்படம் எடுத்து வந்தோம்.

ஒருநாள் அப்படி படம் எடுக்க செல்லும் போது அங்கு ஒரு கும்பல் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தனர். அதுவும் நிர்வாணமாக, சேற்றில் தர தரவென்று அடித்து இழுத்துக் கொண்டு சென்றனர்.                                         
 டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் 
வெளியான செய்தி கவரேஜ்

என்னவென்று விசாரித்த போது, அவன் வட மாநிலத்தைக் சேர்ந்த இளைஞன் என்றும், எதையோ திருடி விட்டதால் அப்படி அடிக்கிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன். அப்போது எடுத்த புகைப்படம்தான் இது. அடித்தவர்கள் அவனை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டனர். போலீஸ் விசாரித்தபோதுதான் உண்மை புரிந்தது... அவன் மனநிலை சரியில்லாத இளைஞன் என்பது.

ஆனால் அந்த உண்மை தெரிந்திருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் அவனை அடித்த அந்த மனித உரிமை மீறல் கண்டிக்கத்தக்கது. பின்பு நாங்கள் வெளியிட்ட அந்த புகைப்படத்தால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு மனித உரிமை மீறலுக்கான புகைப்படமாகத்தான் அதனைப் பார்க்கிறேன்...’’

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அருகேயுள்ள லட்டூர் என்ற மிகச்சிறிய கிராமத்தின் விவசாயக்குடும்பத்தில் இருந்து கிளம்பி, டில்லியில் தடம் பதித்திருக்கும் ஷங்கர்... கடந்து வந்த பாதைகள் கடுமையானவை. சகல திசைகளிலும் எதிர்ப்பு, கால்களை வாரி கீழே தள்ளுவதற்காக மட்டுமே நீளும் கைகள், குழிபறிப்பு சம்பவங்கள் என பல தடைகள் படையெடுத்து வந்தபோதும், கடுமையான உழைப்பு ஒன்றையே ஆயுதமாக முன்னிறுத்தி, இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பது, படம் பிடிக்கிறவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்.

1993, மே 24ல் தினமலர் (சென்னை) நாளிதழில் பத்திரிகை பணியைத் துவக்கி, 12 ஆண்டுகள் அங்கு புகைப்படக்காரராக பல்வேறு முத்திரைகள் பதித்திருக்கிறார். 2005ல் தினகரன். அங்கு 11 மாதப்பணிக்குப் பிறகு, ‘குளோபல் நியூஸ் ஏஜென்சி’ மற்றும் பி.டி.ஐ., எனப்படுகிற பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவில் தலா ஒரு வருடம் பணிபுரிந்தப் பிறகு 2008ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இணைந்தார். அங்கு தலைமை புகைப்படக்காரராக பணிதொடர்கிறார். புகைப்படப்பணியில் பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். தமிழ்நாடு பிரஸ் போட்டோகிராபர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்படுகிற அப்பாவிகளின் கேடயமாக இவரது ‘கேமரா’ பலமுறை களமாடியிருக்கிறது. சமூக அக்கிரமங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற அகற்றப்பட வேண்டிய அநாகரிகங்களுக்கு எதிராக, ஒத்த சிந்தனை கொண்ட அமைப்புகளுடன் இணைந்து தனிநபர் இயக்கமே நடத்திக் கொண்டிருக்கிறார். எந்த பிடிப்பும் இல்லாமல், தனது திறமையை மட்டுமே துடுப்பாகக் கொண்டு மேலெழும்பி வந்த இவர், எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டுத் தத்தளிக்கும் எத்தனையோ இளைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டி, கரை சேர்க்கிற செயலை, ஓசையின்றி செய்து கொண்டிருக்கிறார்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே இலக்காக கொண்டு ஓடிக் கொண்டிருக்கிற சராசரி மனிதர்களுக்கு மத்தியில் சமுதாய சேவைக்கும் நேரம் ஒதுக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஷங்கர், ‘‘பத்திரிகை துறை பணம் சம்பாதிப்பதற்கான துறை அல்ல. இங்கு பணியாற்றுபவர்களுக்கு மனித நேயம் அவசியம். மனித உரிமை மீறல், குழந்தைத் தொழிலாளர், பெண்ணடிமை போன்ற சமூக அவலங்களை வெளிக்கொண்டு வருவதே பத்திரிகைத் துறையின் கடமை. அதில் புகைப்படக் கலைஞனின் பங்கு என்பதை சமூக அவலங்களை உலகத்திற்கு காட்டும் கருவியாகத்தான் பார்க்கிறேன்...’’ என்கிறார்.























விருது பெற்றுத்தந்த புகைப்படம்

விருது பெறும் புகைப்படங்கள் என்றாலே, வித விதமான லைட்டிங், வித்தியாசமான கோணங்கள் என பழகிப் போன நமக்கு, ஷங்கரின் புகைப்படம் சற்று மாறுபாடாக தோணுகிறது. அதில் எந்த வித்தியாச கோணமும் இல்லை. அதிகப்பட்ச அழகியலும் இல்லை. அப்புறம் எப்படி விருது...? அது பற்றிக் கேட்கும் போது, ‘‘செய்திப் புகைப்படங்கள் எடுக்கும் போது நாம் அழகியல் கூறுகளைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அது கண்டிப்பாக தேவையும் இல்லை. ஒரு மனித உரிமை மீறலுக்கான இச்சம்பவத்தில், நடந்த நிகழ்வுதான் இப்படத்தில் அழகியல். இதே காட்சியை நான் செல்போனில் உள்ள கேமராவில் எடுத்திருந்தால் கூட பெரும் அளவில் பேசப்பட்டிருக்கும். ஏனென்றால் இதுபோன்ற நிகழ்வுகளில் பதிவு செய்யப்படுகிற விஷயம்தான் முக்கியமே தவிர, பதியப்படும் விதம் அல்ல. பதியப்படும் விதம் என நான் குறிப்பிடுவது அழகியலை,’’ என்கிறார் ஷங்கர்.

மத்திய அரசு சார்பில் முதல் முறையாக அறிவிக்கப்படுகிற ஒரு விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஷங்கர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பத்திரிகைத்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல... நம் அனைவருக்குமே பெருமை அளிக்கிற விஷயம். பெருமையாக உணர்பவர்கள், அவரது இ-மெயில் முகவரி (shankar.lattur@gmail.com) இன்-பாக்சில் உங்கள் வாழ்த்துகளையும் இணைத்துக் கொள்ளலாம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
    yes.krishnakumar@yahoo.in

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

ஆத்மா said…
திரு ஷங்கர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்..
மனதை உருக்கும் ஒரு நிகழ்வினை அழகான ஏனையவர்களுக்கு தெரியப்படுத்தி அதனுடன் தொடர்புபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்த பத்திரிகையாளருக்கு விரு கிடைப்பதென்பது புதிதல்ல...
விருதுக்கு தகுதியானவர்தான் ஷங்கர் என்பதை இந்தப் புகைப்படமே சொல்கிறது
பகிர்வுக்கு நன்றி
Anonymous said…
thiru iraththinam sankarukku ennudaiya manamaarndha vaazhththukkal (enakku indha virudhil siru iyyappaadu oru velai idhe pugaippadam oru thamizhanukku nadandhirundhaal virudhu kidaikkaamal poyirukkalaam enbadhu ennudaiya karuththu)
surendran