போராட்டம் இன்னும் முடியவில்லை...! கேப்டன் லட்சுமி நேர்காணல்


நீங்கள் ஒரு மருத்துவர். மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் உங்களுக்குப் பலவிதமான எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் இருந் திருக்கக்கூடும். வாழ்க்கை இனிமையாக இருந்திருக்கும். நீங்கள் இந்த சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு கஷ்டங் களை அனுபவிக்க உங்களைத் தூண்டி யது எது?

எங்கள் குடும்பமே அரசியல் நடவடிக்கை களில் தீவிரமான ஈடுபாடு உடையதுதான். குறிப்பாக என் தாயார் திருமதி அன்னு ஸ்வாமி நாதன் எனக்கு மிகவும் ஆதர்சமாக விளங்கி னார். அவர் காங்கிரஸ் சேவகி. சென்னை முனிசிபல் கார்ப்பரேஷன் அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942ல் நடந்த விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். பிற்காலத்தில் அரசியல் சாசன நிர்ணய சபைக்கு இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமுறை லோக் சபாவுக்கு, மற்றொரு முறை ராஜ்ய சபா வுக்காக. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அரசியல் சூழ்நிலையிலும் பலவிதமான போராட்டங்களுக்கும் இடையில்தான். மிகச் சிறு வயதிலேயே, நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் என் உள் ளத்தில் வேரூன்றியதும், இந்தச் சூழ்நிலை யில் நான் வளர்ந்ததால்கூட இருந்திருக்கலாம்.


காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப் போரில் ஈடுபடுவதை விட்டு நீங்கள் இந் திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தது ஏன்? இதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உண்டா?

இளம் வயதினரான நாங்கள் எல்லோ ருமே நேதாஜியின்பால் ஈர்க்கப்பட்டோம். நான் எம்.பி.பி.எஸ் படிப்பை கவனமாக படித்தேன். இடையில் இரண்டாவது உலக மகா யுத்தம் வந்தது. பிரிட்டிஷ் ராணுவம் எங்களுக்கு பல சலுகைகளை அறிவித்து இராணுவத்தில் நல்ல பதவிகளைத் தருவ தாக ஆசை காட்டியது. என் சக மாணவ, மாணவிகளில் சிலர் இவற்றை ஏற்றுக்கொண் டனர். ஆனால், நான் எந்த சூழ்நிலையிலும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருவதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். அந்தக் காலத்தில் சென்னையில் தனியார் வைத்திய சாலை வைப்பதோ, மருத்துவம் பார்ப்பதோ மிகக்கடினம். மிகவும் குழம்பிப்போனேன். அந்தச் சமயம் எதுவுமே என் மனதிற்கு பிடித் தமான வேலையாக கிடைக்கவும் இல்லை. சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவம் தோன்றியதும் என் உள் மனதில் ஏக்கங்க ளுக்கு இதுதான் வடிகால் என்று உணர்ந் தேன். உடனே அதில் சேர்ந்து விட்டேன்.

நேதாஜி சிங்கப்பூருக்கு எப்போது வந்தார்? நீங்கள் அவரை எப்படி சந்தித்தீர்கள்?

சிங்கப்பூர் யுத்தம் 1942 பிப்ரவரி 15ம் தேதி முடிவுற்றது. மறுநாள் இந்திய இராணுவ வீரர் களின் மிகப்பெரிய ஊர்வலம் (அவர்களின் அதிகாரிகளும் கலந்துகொண்ட) நடைபெற் றது. ராஷ்பிஹாரி போஸ், புஜிவாரா மோகன் சிங் மூவரும் இந்த ஊர்வலத்தில், இந்திய ராணுவ வீரர்களை வரவேற்றுப் பேசினர். இந் திய தேசிய ராணுவம் தோற்றுவிக்கப்பட்டது. இவை நடந்த சமயம் நான் சிங்கப்பூரில் இருந் தேன். சிங்கப்பூர் ஊர்வலம் நடந்த ஓராண் டிற்குப் பிறகு நேதாஜி சிங்கப்பூர் வந்தார்.

அவர் சொன்னார் : “நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த உலக யுத்தத்துக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நமது முதன்மையான நோக்கம் தாய்நாட்டு விடுத லையே ஆகும். 48 மணி நேரத்தில் ஒருவர் செய்யும் வேலையை 24 மணி நேரத்தில் முடிக்குமளவுக்கு நமக்கு பொறுப்புகள் காத்தி ருக்கின்றன. இதுவொரு புதுமையான இராணுவப்படை. இதில் சிப்பாய்களுக்கும், சாதாரண பொது ஜனங்களுக்கும் எந்தவித மான பாகுபாடும் கிடையாது. 18லிருந்து 25 வயது வரையிலான எல்லா இளைஞர் களையும் நாங்கள் இந்தப் படையில் நியமிக்க உள்ளோம்.’’

நேதாஜி வருமுன் இந்தப் படையில் 30 ஆயிரம் வீரர்கள் இருந்தார்கள். நேதாஜி விடுத்த உணர்ச்சிமிகு வேண்டுகோளுக்குப் பிறகு, இரண்டே வாரத்தில் படையின் எண் ணிக்கை 60 ஆயிரத்தைத் தொட்டது. பெண் களை பார்த்து நேதாஜி சொன்னார் : “உங்க ளுக்குத்தான் நாட்டுச் சுதந்திரம் மிகவும் முக்கியம். வெளிநாட்டு ஆட்சி என்ற பொருந் தாத தளையிலிருந்து மட்டுமல்ல, சமூக அள வில் உங்களைப் பாதிக்கும் தளைகளிலிருந் தும் விடுபட பாடுபடுங்கள்’’ என்றார். “பார்க் கப் போனால் இந்தியப் பெண்களை இந்த விடுதலைப் போராட்டத்தில் சேர்த்துக் கொள் வது மிக இன்றியமையாத ஒன்றாகும்’’ என் றார். முழுவதும் பெண்களாலேயே ஆன ஒரு ரெஜிமெண்டை துவக்கும் எண்ணம் அவருக் குத் தோன்றியது. அவர் இந்த உரையை ஆற்று வதற்கு முதல்நாள்தான் நான் அவரை சந்தித் தேன்.

நீங்கள் நேதாஜியை முதன்முதலாக சந் தித்ததைப் பற்றி இன்னும் விபரமாக சொல்ல முடியுமா? இந்த சந்திப்பில் உங்க ளின் மறக்க முடியாத அனுபவங்கள் என்ன என்பதையும் சொல்லுங்கள்?

இதுவரை எனக்கும் ஐ.என்.ஏ. அதிகாரி களுக்கும் இடையே மிக குறைந்த அளவில் தான் பழக்கம் இருந்தது. நான் அவர்களை நேதாஜியை சந்திக்க ஏற்பாடு செய்ய நச்சரித் தேன். நேதாஜியுடன் தன்னைச்சார்ந்த அதி காரிகளிடம் ஒருமித்த கருத்துடைய பெண் கள் தன்னை சந்திக்க விரும்பினால், எப்ப வுமே தான் தயார் என்றும் உடனே அது போன்ற சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யும்படி கட்டளையிட்டிருந்தார். இந்த அதிகாரிகள் தான் என்னை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தி னர். யாரிடத்திலும் வீர உணர்வை எழுப்பும் வசீகரமான தோற்றம் உடையவர் நேதாஜி. நாங்கள் ஐந்து மணி நேரம் பேசினோம். முதல் சந்திப்பிலேயே முழு ஐந்து மணி நேரமும் நாங்கள் உரையாடினோம்.

பெண்களாலேயே நடத்தப்படும் ஒரு ரெஜி மெண்டைத் துவக்கும் விஷயத்தில் என் அபிப்பிராயத்தைக் கேட்டார். நல்ல யோசனை தான். நான் சேரத் தயார். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது என்றும் சொன்னேன். அவர் சொன்னார், “மற்றவர்களைப் பற்றி நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நீ நமது சரித்திரத்தைச் சற்றுப் புரட்டிப்பார். எப்போ தும் பெண்கள் தாங்கள் சார்ந்த ஆண் மக்க ளுக்குத் துணையாக போராடியே வந்திருக் கிறார்கள். 1857ல் ராணி லட்சுமிபாய், பேகம் ஹஸரத் மஹல் மட்டுமல்ல, சாதாரண நாட் டுப்புற பெண்கள் கூட வீரத்துடன் போராடி யிருக்கிறார்கள். வங்காளத்தில், புரட்சித் தலை விகளாக சாந்தி, ப்ரீதி, லதா போன்றவர்கள் இருந்தார்கள். இதுதவிர, கணக்கிலடங்காத பொதுமக்களில் பெண்கள், காந்திஜியின் வன் முறையற்ற போராட்டங்களில் தொண்டர்க ளாக வந்து, துப்பாக்கிக் குண்டுகளையும் அடி களையும் தாங்கியபடி தைரியமாக எதிர்த்து நின்றிருக்கின்றனர். நமது நாட்டுச் சரித்திரத் தில் பெண்களுக்குப் பஞ்சமேயில்லை. இந்த வழிமுறை இன்னமும் தொடரவேண்டும் என்றார்.

மிகக்கடுமையான உழைப்புக்குப் பல னாக, சிங்கப்பூரில் ஆறாயிரம் பெண் தொண் டர்களைத் திரட்டி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தேன். அவர்களில் அநேகமாக எல்லோ ருமே படிப்பறிவு இல்லாதவர்கள். தமிழும், மலையாளமுமே தெரிந்து கொள்வார்கள் என்பதை நேதாஜியிடம் சொன்னேன். நேதாஜி தமது சொற்பொழிவை, ‘ஹிந்துஸ்தானில் செய்ய, நான் அதை மொழிபெயர்த்து இந்தப் பெண்களுக்குச் சொன்னேன். நேதாஜியின் பேச்சைக் கேட்டு இந்தப் பெண்கள், ஆச்ச ரியத்தினால் ஸ்தம்பித்து நின்றார்கள். கடை சியில் நேதாஜி ஐ.என்.ஏ படையில் தானாக முன்வந்து தொண்டர்களாக சேர யாருக்கெல் லாம் விருப்பம் என்று கேட்க, கூட்டம் மொத் தமுமே, மேடையை நோக்கி ஓடிவந்தது. கையில் குழந்தையுடன் பலர் இருந்தனர். கடு மையாக மழை பெய்யத் தொடங்கிவிட்டது. ஆனால், இவையெல்லாம் அவர்களின் உற் சாகத்தைக் குறைக்கவில்லை. நேதாஜியின் வார்த்தைகளில் என்ன மாயம் இருந்தது. எப் படி மந்திரத்திற்கு கட்டுப்படுவது போல எல் லோரும் ஒருமித்தக் குரலோடு அவரை ஆத ரித்தனர் என்பதை கண்ணால் காணாத நீங் கள் ஒப்புக்கொள்வதோ, எண்ணிப் பார்ப்பதோ கடினம்.

ஜான்சிராணி ரெஜிமெண்டைப் பற்றியும், அதில் உங்கள் பங்கு என்ன என்பதையும் சற்று விளக்கிச் சொல்லுங்களேன்.

எங்களுடைய ரெஜிமெண்ட் அதாவது படை சிங்கப்பூரில் பயிற்சி பெற்றது. மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு நாங்கள் பர்மா வந்து சேர்ந்தோம். இங்கும் சில நேரடிப் பயிற்சிகள் எங்களுக்கு அளிக்கப்பட்டன. இதன்பிறகு முன்னேறச் சொல்லி எங்களுக்குக் கட்டளை பிறந்தது. இந்திய தேசிய ராணுவம் இம்பால் நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந் தது. அவர்களுக்கு உதவி செய்யும்படி நாங்கள் பணிக்கப்பட்டோம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக முன்னதாக வந்துவிட்ட மழைக்காலம், கடுமையாகப் பொழிந்தது. எங்கள் நடமாட்டத் தைத் தடுத்தது. சாதாரணமாக இந்தப் பகுதி களில் மழை, மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில்தான் பெய்யும். அந்த ஆண்டு மழை ஏப்ரல் மாதமே துவங்கிவிட் டது. இது மிகவும் பயங்கரமான மறக்க முடி யாத போர் அனுபவம். இந்திய தேசிய ராணு வத்தினர், தங்கள் வீரத்தை பொன்னெழுத்துக் களால் பொறிக்கும்படியான, சரித்திரத்தை இங்கு நிகழ்த்திக் காட்டினார்கள் என்றால் மிகையாகாது. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ராணு வம் பின்வாங்கும்படி ஆயிற்று. நாங்கள் மணிப் பூரை விடுவித்து, ஜோர்ஹட் வரை எங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டோம். ஆனால் கடும் மழை தொடர்ந்தது. அந்த அளவு மழையை சமாளிக்க நாங்கள் தயாராக இல் லை. முன்னேறி தொடர்ந்து போக முடியாமல் அது தடுத்தது. யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது. உணவும் யுத்த தள வாடங்களும் எங்களுக்கு பற்றாக்குறையாகப் போயிற்று. மிகவும் கஷ்டப்பட்டு சமாளித் தோம் என்றால் மறுபுறம் பயங்கரமான விஷப் பாம்புகள், பூச்சிகள், போதாததற்கு கொட்டும் மழை வேறு. எங்களுடைய இந்த நெருக்கடி யை பிரிட்டிஷ் இராணுவத்தினரும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். வேறு வழியின்றி நாங்கள் பின்வாங்கினோம். ஆனால் அது மிக பயங்கரமான போருக்குப் பிறகுதான்.

நேதாஜியுடன் கடைசி சந்திப்பு முக்கிய மான கட்டமாக இருந்திருக்கும். அந்தச் சந்திப்பில் என்ன நடந்தது?

பலமுறை நேதாஜி கேட்டார். “நீங்கள் எல் லோரும் எங்களுடன் வரப்போவதில்லை யா? தயவுசெய்து வாருங்கள். எங்கள் வண்டி யில் இடம் இருக்கிறது. ரங்கூன் சென்றவு டன் நாம் நமது நடவடிக்கைகள் பற்றித் தீர் மானிப்போம்’’ என்றார். நான் சொன்னேன். “இந்தப் போர்முனையை விட்டு இந்தச் சம யம் வரமாட்டேன்.’’ நேதாஜி எங்களுடைய மனஉறுதியைக் குலைக்க விரும்பவில்லை. அவ்வளவு நெருக்கடியான சமயத்திலும் அவரது புன்சிரிப்பும், தன்னம்பிக்கையும், அவர் முகத்தில் பிரதிபலித்ததைக் காண முடிந்தது. ஷா எஸ்டேட்டில் நிறைய உளவா ளிகள் சுற்றிக்கொண்டு இருந்திருக்கின்றனர். நேதாஜி எங்களை விட்டுச் சென்றபின், அந்த மருத்துவமனையில் குண்டு வீச்சு பயங்கரமாக இருந்தது. மருத்துவமனை முழுவதும் பாழாகியது. டாக்டர்கள் எப்படியோ காப்பாற்றப்பட்டனர். ஆனால், நோயாளிகள் பெரும்பாலும் கொல் லப்பட்டனர். அப்படியும் உயிர் பிழைத்தவர் களை மாட்டு வண்டிகளில் ஏற்றி ரங்கூ னுக்கு அனுப்ப முயற்சித்தோம். கொரில்லாக் கள் எங்களை பின்தொடர்ந்து, வழிமறித்தனர். நாங்கள் கைதானோம். போர்க்கைதிகளாக ரங்கூனுக்கு கொண்டுவரப்பட்டோம்.

போர்க்கைதியாக உங்களுடைய அனுபவம் எப்படியிருந்தது?

எங்கள் ரெஜிமெண்ட் பிரித்து தனியாக வைக்கப்பட்டிருந்தது. என்னை ஒருவரும் சித்ரவதை செய்யவில்லை. எங்களை கேள் விகள் கேட்கும்போது அடிக்கடி ஒரு கேள்வி வரும். ஜப்பான், பிரிட்டனை விட உயர்ந்ததா? என்பதுதான் அது. நான் சொல்வேன், எனக்கு ஜப்பானும் சரி, பிரிட்டனும் சரி, ஒரு விதத் திலும் உயர்வு என்று தோன்றவில்லை. எங் களுக்கு வேண்டியதெல்லாம் தாய்நாடான இந்தியாவின் விடுதலைதான் என்று. நாங்கள் ஒருபோதும் ஜப்பானியர்களுக்கு அடிமையாக மாட்டோம். நிச்சயமாக எங்கள் சுதந்திர அர சாங்கத்தை எங்கள் நாட்டில் ஏற்படச் செய் வோம்.

பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்த ஸ்காட் சிப்பாய்கள் எங்கள் உறுதியைக் கண்டு வியந்தார்கள். எப்போதும் எங்களைப் பாராட்டுவார்கள். நாங்கள் செய்வது மிக புனிதமான தொண்டு என்று சொல்வார்கள். இந்த சிப்பாய்களுக்கும் பிரிட்டனைப் பிடிக் காது. அவர்களுள் பலரும் எங்களிடம் ஒத் துக்கொள்வார்கள். “ஆம், சுதந்திரத்திற்கு இணையாக வேறு எதுவுமே கிடையாது. நாங் களும் அதை அடைந்தே தீருவோம்’’ என் பார்கள்.

உங்களை எப்போது விடுதலை செய் தார்கள்?

1946ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நான் வீட்டுச் சிறையில் இருந்தேன். நான்தான் கடைசியாக விடுதலையானேன். இதற்குள் வழக்கு விசாரணைகள் முடிந்து அரசியல் சட்ட நிர்ணய சபை உருவாகிவிட்டது. எனக்கு விடுதலை கிடைத்ததும் நான் இந்தி யாவுக்கு திரும்பி வந்துவிட்டேன்.

நீங்கள் பிறவியிலேயே புரட்சி மனப் பான்மை கொண்டவர். நிம்மதியற்ற அந்த இடைக்காலங்களில் நீங்கள் இந்தியா விற்கு வந்து என்ன செய்தீர்கள்?

இந்தியாவைத் துண்டாடும் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. விடுதலைப் போராட்டங்கள் ஓய்ந்துவிட்டன. நாட்டிலி ருந்து பாகிஸ்தான் வெட்டி எடுக்கப்பட்டு, தனி நாடாக அறிவிக்கப்பட்டது. நிலைமை சீர்குலைந்திருந்தது. எங்கும் வெறுப்பும் உட்பகையும் விரோதமும், வன்முறையும், பைத்தியக்காரத்தனமான கோபாவேசமும் நிலவியது. வடகிழக்கு தேசங்களிலிருந்து விடுதலையாகி வந்து ஐ.என்.ஏ. சிப்பாய்களுக் காக என்றே நாங்கள் ஓர் ஆண்டு வேலை செய்தோம்.

வங்கதேச யுத்த சமயம் நீங்கள் சில உதவி முகாம்களை நடத்தினீர்கள். அதுபற்றிச் சொல்லுங்களேன்.

அந்த சமயம் மேற்குவங்காளத்தின் கவர் னராக இருந்தவர் பத்மஜா நாயுடு. நான் உதவி. முகாம்களில் தன்னிச்சையாக சேவை செய்ய விருப்பம் தெரிவித்து அவருக்கு கடிதம் எழுதினேன். எனக்கு வங்காள மொழி தெரி யாது. மிகவும் இடையூறாக இருக்கும் என்றும், இந்த வேலை மிகவும் கடினமானது என்றும் பதில் எழுதினார். இதற்கு பதில் நான் பணம், மருந்து முதலியவைகளை வசூலித்து அனுப் பலாம் என்று யோசனை கூறினார். இதற் கிடையில் ஜோதிபாசு அவர்கள் பத்திரிகை களில் ஒரு விண்ணப்பம் விடுத்திருந்தார். சேவை மனப்பான்மை கொண்ட டாக்டர் களை அவர் வரவேற்றார். நான் கல்கத்தா போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்து “மக்களின் நிவாரண கமிட்டி’’யில் மற்ற டாக்டர்களோடு எல்லைப் பிரதேசங்களுக்கு சென்றேன். அங்கு 5 அல்லது 6 வாரம் வேலை செய்தேன். இங்கும் வேலை கடினமாக இருந்தது. திடீர் திடீரென்று வெடி ஓசைகளும், துப்பாக்கியால் சுடுவதும், வெடிவைத்து தகர்ப்பதுமாக ஒரே களேபரமாக இருந்தது. ஆனால், இந்தச் சூழ்நிலை எனக்கு பழக்கமானதே. அதனால் சமாளித்தேன்.

மருத்துவத் துறையைத் தவிர உங்களை கவர்ந்த மற்ற துறைகள் எவை?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர், மேலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர். அதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

நான் பல புரட்சியாளர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் இந்தியாவின் தற்சமய அரசியல் நட வடிக்கைகளால் நொந்துபோய் இருக் கிறார்கள்.

அப்படியல்ல, இது சரியல்ல நாம் ஒரு குறிக்கோளுடன் சண்டையிட்டோம். அந்தக் குறிக்கோள் சுதந்திரம், முழுமையான சுதந் திரம். அதனால் எங்கள் முயற்சிகள் வீண் என்று பொருள் அல்ல. அந்த போராட்டத்தின் உட் பொருள் அழியவில்லை. அதனுடைய பாதிப்பு இன்னமும் வெளிப்படையாகவே உள்ளது.

(நன்றி: புத்தகம் பேசுது)
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments