24 ஜூலை, 2012

ரஜினி, கமல் - நினைத்தாலே இனிக்கும் டிஜிட்டல் வேடம் பூண்டு திரைக்குவருகிறது


ரஜினி, கமல் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. இருவரும் இணைந்து இனி நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். இருப்பினும் அவர்கள் இருவரும் கடைசியாக சேர்ந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் புத்தம் புதுப் பொலிவுடன் தமிழகம் முழுவதும் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம்.


இப்போது உள்ள லீடிங் ஹீரோக்களைப் போல அல்லாமல், அதிக அளவிலான படங்களில் இணைந்து நடித்தவர்கள் ரஜினியும், கமலும். அவர் பெரியவரா, இவர் பெரியவரா என்று எந்தவிதமான பாகுபாடும் காட்டாமல் இருவரையும் வைத்து கே.பாலச்சந்தர் பல படங்களைச் செய்தார். இருவருக்கும் சமமான வாய்ப்புகளைக் கொடுத்தார். அதேபோல இருவரும் இமேஜ் பார்க்காமல், கதையை மட்டும் பார்த்து அசத்தலாக நடித்தார்கள், அந்தந்த கேரக்டர்களாக வாழ்ந்தார்கள். இதனால் ரசிகர்களும் இருவரையும் திரையில் பார்க்காமல், அந்தந்த கேரக்டர்களாக மட்டுமே பார்த்து ரசித்தனர். இன்று வரை இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களுக்கு இணையாக எந்தப் படமும் வரவில்லை என்று கூட சொல்லலாம்.


இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள் என்றால் கடைசிப் படமாக இருப்பது நினைத்தாலே இனிக்கும். இதுவும் கே.பாலச்சந்தரின் படம்தான். அந்தக் காலத்து இளைஞர்களின் மனம் முழுக்க நிரம்பிக் கிடக்கும் படம். அழகான காதல் கதையை ரகளையாக கூறியிருப்பார் கே.பாலச்சந்தர். எம்.எஸ்.விஸ்வநாதனின் இனிய இசை, இன்று வரை காதுகளிலேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் அருமையான படம்.
ஒரு இசைக் குழுவின் பாடகனுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல்தான் இப்படத்தின் கதை. சிங்கப்பூருக்குப் போகும் போது அந்தப் பெண்ணை சந்திக்கிறான் நாயகன். அவர்களின் காதல் என்ன ஆகிறது, அந்தப் பெண்ணின் பின்னால் மறைந்துள்ள மர்மம் என்ன என்பதுதான் படத்தின் கதை. யாரும் எதிர்பார்த்திராத கிளைமேக்ஸ் இப்படத்திற்கு. அதுதான் இப்படத்தை தூக்கி நிறுத்த முக்கியக் காரணம்.

video

எங்கேயும்.... எப்போதும் .... பாடல் வீடியோ பார்க்க 

கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடி ஜெயப்பிரதா. ரஜினிகாந்த்தின் ரோல் கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ போலத்தான். ஆனாலும், தனது ஸ்டைலால் கமலுக்கு நிகராக கலக்கியிருப்பார். குறிப்பாக கீதாவிடம், சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிடித்து இம்ப்ரஸ் செய்யும் காட்சி.
இந்தப் படத்தை தற்போது புத்தம் புதுப் பொலிவுடன் மறு திரையீடு செய்யவுள்ளனராம். 1979ம் ஆண்டு இப்படம் முதலில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தின் ஒலி, ஒளியை மெருகேற்றி நவீன முறையில் புதுப்பித்து டிஜிட்டல் முறையில் மாற்றி திரையிடத் திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.
ஏற்கனவே சிவாஜி கணேசனின் கர்ணன் படத்தை டிஜிட்டல் மயமாக்கி வெளியிட்டு பெரும் வெற்றி கிடைத்தது. இதையடுத்து மேலும் சில சிவாஜி படங்களை டிஜிட்டல் மயமாக்கி வருகின்றனர். அந்த வகையில் அந்தக் காலத்தில் அனைவரையும் ஈர்த்த நினைத்தாலே இனிக்கும் டிஜிட்டல் வேடம் பூண்டு திரைக்கு வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Related Posts Plugin for WordPress, Blogger...