திருநங்கைகள் திருவிழா


அலி,பொட்டை, 9(ஒம்போது) இப்படி கேலி,கிணடல் செய்யப்படுகிற அரவாணிகள் என்று அழைக்கப்படுகிற திருநங்களின்  திருவிழா விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளை போலவே இந்தாண்டும் கடந்த 13ம் தேதி தொடங்கி மிகச்சிறப்பாக நடந்து வருகிறது.மே 1-ந் தேதி அரவாணிகள் தாலிகட்டும் நிகழ்ச்சியும், மறுநாள் மே 2-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. சமூகத்தால் ஒதுக்கப்படுகிற மூன்றாம் பாலினமான திருநங்கைகளின் ஒரே திருவிழா இதுதான்.
இதனை கூத்தாண்டவர் திருவிழா என்றும் அழைக்கிறார்கள். இந்த திருவிழாவிற்கு பின் இருக்கிற கதை தியாகத்தின் வெளிப்பாடக உள்ளது. மாகாபாரத கதையின் ஒரு கிளைக்கதையே இந்த கூத்தாண்டவர், அரவானின் கதையாகும்

கூத்தாண்டவர் கதை

இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டா டப்படுகிறது.இந்தியாவிலுள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ் பெற்ற புண்ணியத்தலமாக விளங்கக் கூடியது கூத்தாண்டவர் கோயில். தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீ தூரத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தவிர பாண்டிச்சேரியிலுள்ள பிள்ளையார் குப்பம், மடுகரை, சிதம்பரம் அருகில் கொத்தடை, தேவனாம்பட்டினம் பகுதிகளிலும் கூத்தாண்டவர் கோயில்கள் இருக்கின்றன. இருப்பினும் விழுப்புரம் கூவாகம் கிராமத்திலுள்ள கூத்தாண்டவர் கோயில்தான் மிகவும் புகழ்பெற்றது.இந்த கோயிலின் வெளித்தோற்றத்தில் மற்ற கோயில்கள் போல் இருந்தாலும் கோயில் கருவரையில ஓரு மரஊஞசல் உள்ளது. அதில் மரத்தால ஆன அரவான் தலை மட்டும் வைக்கப்பட்டுள்ளது.

மகாபாரதப் பெருங்காதையில் அர்ச்சுணனால் கவரப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட வேடுவப் பெண்ணான நாகக்கன்னியின் மகன் அரவான். குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க "எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்" என ஆருடம் கூறுகிறது. பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்களாக இருப்பவர்கள் அர்ஜுனன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர்.
அர்ஜீனனும், கிருஷ்ணரும் தான் இந்த போருக்கு முக்கியமானவர்கள் என்பதால் அரவானைப் பலியாக்க முடிவு செய்து இருவரும் அவனை அணுகுகின்றனர். அரவான் பலிக்கு சம்மதித்தாலும், அவனுக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை முடித்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என சொல்கிறான். வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தப் பெண்ணும் இதை ஏற்க முன்வரவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த கதையின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் நிகழ்வாகக் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா உள்ளது.


சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்கின்றனர். இரவு முழுவதும் தங்களது கணவனான அரவானை வாழ்த்திப் பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ச்சியாயிருக்கின்றனர். பொழுது விடிந்ததும் அரவானின் இரவு களியாட்டம் முடிவடைகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறான். வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது. திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணுகின்றனர்.சித்திரை மாதம் பௌர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து திருநங்கைகள் விழுப்புரம் வந்து விடுகின்றனர். இந்நிகழ்வு இந்தியாவின் பல பாகங்களில் இருந்து வரும் திருநங்கைளை ஒன்றினைக்கும் விழாவாக அமைகிறது. திருநங்கைகள் சந்திக்கவும், அவர்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்கள் கலைகளை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் இது அமைகிறது.இயற்கையின் தவறாக ,குரோமோசோம்களின் குறைப்பாட்டால் மூன்றாம் பாலினமான திருநங்கைகளின் திருவிழா சிறப்பாக அமைய வாழ்த்துவோம்,அவர்களை சகமனிதர்களாக நடத்துவோம்.

-பென்னிசெல்வன்,.

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

மனிதன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
முழுமையான நல்ல விளக்கம்.

(இந்தியாவின்) அனைத்து திருநங்கைகளும் சுதந்திரமாக திருவிழா கொண்டாட வழிவகை செய்து உள்ள தமிழர்களின் பெரிய மனப்பான்மையை போற்றி பெருமை கொள்வோம்.

கூத்தாண்டவர் கோயில் திருவிழா நல்லபடியாக நடக்க வாழ்த்துகிறேன்.

பகிர்வுக்கு நன்றி.