12 டிச., 2011

ரஜினியிடம் சில கேள்விகள்


ஒரு காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த ரசிகனின் வேத னை யும், ஆதங்கத்தின் வெளிப்பாடு,  எதிர்பார்ப்பும் கூட, நிறைவேறுமா என்பதல்ல மனதில் இருப்பதை சொல்லிவிட்ட நிம்மதியாவது கிடைக்கட்டுமே.
 ரஜினிகாந்த் இன்றுவரை சூப்பர்ஸ்டார் என்பதிலோ வசூல் சக்கரவர்த்தி என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அவருக்கு பெயர்,புகழ்,பணம்,அந்தஸ்து பெற்றுக்கொடுத்த தமிழ்சினிமாவுக்கோ, தமிழக ரசிகர்களுக்கோ,கைமாறு செய்திருக்கிறாரா
என்று பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.ரஜினிகாந்தின் அரசியல் பார்வைகள், சினிமாவை பயன்படுத்தும் விதம்,பெண்கள் குறித்தான அவரது பார்வை என பார்த்தோமானால் அவரின் வியாபார நோக்கமும், சுயநலமும் தான் தெரிகிறது.

ரஜினிகாந்தின் அரசியல் பார்வை...

1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ,- த.மா.க வுக்கு  ஆதரவாக ''மீண்டும் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாத்த முடியாது'' என்ற வசனம் தான் அவரது முதல் அரசியல் கருத்து. அந்த தேர்தலில் ஜெயலலிதா தோற்றுப்போனார், ரஜினி வாய்ஸ் கொடுக்காவிட்டாலும் அன்றைய சூழ்நிலைக்கு ஜெயலலிதா தோற்றிருப்பார்,அன்றைய அரசியல் சூழல் அப்படி.
     படையப்பா,மன்னன்,எஜமான்.....என அடுத்தடுத்து வந்த  படங்களில் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி எதிப்பார்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் பட வியாபாரத¢தை அதிபடுத்திக்கொண்டார்.படையப்பா படத்திற்கு ரஜினியின் சொந்த திருமணமண்டபமான ராகவேந்திராவில் எல்லாப் பத்திரிக்கையாளர்களையும் அழைத்து படையப்பா ஸ்டில்கள் கொடுக்கப்பட்டது, அதை வைத்துக்கொண்டு பத்திரிக்கைகளும்,
 ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி இந்த படத்தில் தெளிவாக சொல்லப்போகிறார், படையப்பாவில் ஜெயலலிதாவுக்கு எதிரான அதிரடி வசனங்கள் என்ன? என செய்திகளை பரப்பின,
பத்திரிக்கையாளர் சோ தனது துக்ளக் இதழில் , தனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களின் எதிர்பார்பை தொடர்ந்து நீடிக்கச் செய்யும் விதமாக ரஜினி இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்று எழுதினார்.
 மேலும் படையப்பா படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், உள்ளுர் அரசியலில் ரஜினியின் நிலைப்பாட்டை மனதில் வைத்தே வசனங்கள் எழுதப்பட்டுள்ளது என்றார்.
இது போன்ற விளம்பரங்கள் படையப்பாவும் அதற்கடுத்து வந்த அவரது பல படங்கள் நன்றாக ஓடி ரஜினியின் வருமானத்தை உயர்த்த உதவியது. 1996 க்கு பிறகு வந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார், அவருக்கு நடிகர்கள் நடத்திய விழாவில் ரஜினிகாந்த், ஜெயலலிதாவை தைரியலட்சுமி,அஷ்டலட்சுமி என்று புகழ்ந்து பல்டி அடித்தார்.தற்போதைய 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றிக்கு வாழ்த்து அனுப்பி இருக்கிறார். அவரின் அரசில் நிலைபாடு தலைகீழாக மாறியது ஏன்? இதுவரை அவர் அரசியலுக்கும் வரவில்லை,தனது ரசிகர்களுக்கு வழிகாட்டியாகவும் இல்லை.

ரஜினி -25ம் வியாபார நோக்கமும்....

ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் விரிசல் விழத்தொடங்கிய புள்ளி என்றால் அது ரஜினி 25 விழா நிகழ்வுதான்.ரஜினி சினிமாவிற்கு வந்த 25 ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வு குறித்து அப்போதைய பத்திரிக்கை செய்திகள் சில...

 பாராட்டுவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்தவும் பூச்செண்டு கொடுக்கவும் தயார்.ஆனால் அவருக்கு பூக்களை தூவி ஆன்மீக குரு போல் நடத்த எங்களால் முடியாது என்கிறார்கள் திரைப்பட நடிகைகள் -  தினமலர்

ரஜினி எங்களிடமிருந்து தனிமைப்பட்டு விட்டார் என்கிறார்கள் சினிமாக்காரர்கள் - ஜூனியர்விகடன்

ரஜினி விழாவா? லதாவிழாவா? விழாவை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் சினிமா அளவுக்கு பணம் சம்பாதிக்க நினைப்பது வேதனை - ஜூனியர்விகடன்

ரஜினி விழாவில் ரசிகர்கள் உட்காரவே இடம் கிடையாதாம்.ஆனா டிக்கெட் ரூ.100 கொடுத்து வாங்கனுமாம் -  நக்கீரன்

மிக உயர்ந்த அளவுக்கு எளிமையானவர்னு பேசப்பட்ட அவர் தீடிர்ரென இப்படி ஒரு விழாவுக்கு எப்படி சம்மதிச்சாருன்னு தெரியல - இந்தியன் எக்ஸ்பிரஸ்

ரஜினி 25 விழாவின் வசூல்கள்

ரஜினி பொம்மை மட்டும் வைத்திருந்த ரஜினி 25 கண்காட்சியை முழுவதும் ஒன்று விடாமல் பார்க்க ஒருவருக்கு மட்டும் ஆகும் செலவு 2213 ரூபாய், அபிராமி தியோட்டரில் போடப்பட்ட 15 ரஜினி திரைப்படங்களை பார்க்க ஒரு ரசிகனிடம் ரூ100 வசூல் இன்னும் பல....

ரஜினி 25 விழாவை ரஜினியின் துணைவியார் லதாரஜினிகாந்த் தன்னுடைய ஆஸ்ரம் பள்ளியின் வளர்ச்சிக்காக இந்த விழாவை நடத்துவதாக கூறியிருக்கிறார் இப்படி வசூலித்துத¢தான் பள்ளி நடத்த வேண்டுமா? ரஜினியிடம் கூறி ஒரு படத்தின் முதல் நாள் வசூலைப் பெற்றாலே போதுமே.இது போன்ற நிகழ்வுகளால் ரஜினிகாந்தின்  ரசிகர்கள் கொஞ்சம்,கொஞ்சமாக ரஜினிமன்றங்களில் இருந்து விலகத்தொடங்கினர்.

பெண்கள் குறித்து ரஜினிகாந்தின் பஞ்ச்டயலாக்


ரஜினிகாந்தின் அடுத்தபடமான கோச்சடையானுக்கு குமுதம் வார இதழ் பஞ்ச் டயலாக் போட்டியை அறி வித் திருக்கிறது.அந்த அளவுக்கு ரஜினியின் பஞ்ச் டயலாக் பிரப லம். ஆனால் பெண்கள் குறித்த டய லா க் கு கள் சற்று நெருடலையும் சில கேள்விகளையும் எழுப்புகின்றன.

‘ரஜினி என்றால் பெண்களை உயர்வாக மதிப்பவர்’ என்ற கருத்து இருக்கிறதே, அவர் பெண்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் ...

’பொம்பள, அரசியல்வாதி ரெண்டு பேரும் நினைக்கறதை அடையறதுக்கு எதுவும் செய்வாங்க. ஆனா என்ன நினைக்கிறாங்கன்னு அவுங்களுக்கே தெரியாது.’

‘பொம்பள புள்ளைங்க ஊர் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பள புள்ளைங்க வீட்டைச் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க.’
அதாவது ஆண்கள் வெளியில் சென்று சம்பாதிக்க வேண்டும். பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு இருக்க வேண்டும். ஆண்கள் வீட்டில் இருந்தாலோ, பெண்கள் வெளியில் சென்றாலோ கெட்டுப் போய்விடுவார்கள். இந்தக் காலத்திலும் எவ்வளவு தைரியமாக இதுபோன்ற வசனங்களை அவரால் பேச முடிகிறது?

பொம்பள எவ்ளோ படிச்சிருந்தாலும் எவ்ளோ பெரிய வேலையில இருந்தாலும் வீட்டு வேலை செய்யாதவ பொம்பள இல்ல.’
ஆமாம், நாட்டுக்கே பிரதமராக இருந்தாலும் எனக்கு நீ அடிமைதான். பெண்களுக்கு என்று இருக்கும் இலக்கணங்களில் முக்கியமாக இருப்பது வீட்டு வேலை செய்வதுதான். எவ்வளவு படித்திருந்தாலும் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் வீட்டு வேலை செய்யவில்லை என்றால் அவளை எப்படிப் பொம்பளை என்று ஏற்றுக்கொள்வது?

ரஜினியிடம் சில கேள்விகள்


 உங்கள் வீட்டிலும் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்தக் கொள்கைகளின் படியா வைத் தி ருக்கிறீர்களா?உங்கள் மனைவி யோ, மகள்களோ வீட்டுப் பிரச்னைகளைச் சொல்லிவிட்டு, கணவர்கள்தான் தீர்க்க வேண்டும் என்று காத்திருக்கிறார்களா? எந்த முடிவும் அவர்களாக எடுப்பது இல்லையா?
பள்ளி, பிஸினஸ் என்று கொடிகட்டி பறப்பவர்கள், வீட்டு வேலைகளையும் செய்கிறார்களா?காதலிச் சிட்டு புருஷ னாக்குறதை விட, புருஷனாக்கிட்டு காதலிக்கிறது நல்லது’ என்று சொன்ன உங்கள் வீட்டில் மனைவி, மகள்கள் அத்தனைபேரும் காதலித்துதானே திருமணம் செய்துகொண்டார்கள். ‘நல்லது’ என்றால் அதை உங்கள் வீட்டிலேயே பின்பற்றலாமே?
பெண் என்றால் புடைவை கட்டி, கையெடுத்துக் கும்பிடத் தோன்ற வேண்டும் (சாத்வீகம்) என்று சொல்லும் நீங்கள், உங்கள் வீட்டில் அப்படித்தான் இருக்கிறார்களா என்று சொல்ல வேண்டும்.
ரஜினி பேசிய இந்த வசனங்களுக்கு உண்மையில் அவருடைய வீட்டில் இருந்தே எதிர்ப்பு வந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், ’எந்திரன்’ படம் மூலம் இன்று இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டாராகிவிட்டார் என்கிறார்கள். அவர் பல் தேய்ப்பதிலிருந்து படுக்கப் போவது வரை இங்கு செய்திகள். குழந்தை முதல் பெரியவர் வரை அவருக்குத் தீவிர ரசிகர்கள்.தற்போது உடல்நிலை சரியில்லா காலத்தில் அவருக்காக பிரார்த்தனைகள் செய்து , அவரே குறிப்பிட்டது போல நான் இன்று உயிருடன் இருக்க காரணமே ரசிகர்களின் பிரார்த்தனைகள் தான்,இந்த அளவுக்கு அவர் மீது அன்பு செலுத்துகிற தமிழகமக்களுக்கும்,ரசிகர்களுக்கும் இனியாவது ஏதாவது செய்வாரா? எதிர்பார்பே மிஞ்சுகிறது.

என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன்
தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா
என் உடல்பொருள் ஆவியைத்
தமிழுக்கும்,தமிழருக்கும் கொடுப்பது
முறையல்லவா
என படைப்பாவில் பாடியது பாடல்மட்டும் தானா?

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


உதவிய நூல்கள்
ரஜினி சில முகங்கள்- சிலம்பம் வெளியீடு
காலச்சுவடு -அக்டோபர் - டிசம்பர் 1999
ரஜினியிடம் சில கேள்விகள் - தமிழ் பேப்பர் கட்டுரை
-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...