எங்கேயும் எப்போதும் – சினிமா விமர்சனம்


ஒரு நொடி அவசரம்தான் விபத்திற்கு மூலகாரணமாகிறது. அதை தவிர்த்து விட்டால் விபத்து என்ற அரக்கனிடமிருந்து பல உயிர்கள் நிம்மதியுடன் வாழும். அது வாழ்க்கையாக இருந்தாலும் சரி, பயணமாக இருந்தாலும் சரி.


இந்த கருத்தை இரு பேருந்துகளின் விபத்து மூலம் நம் முகத்தில் அறைய வைக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். இதனூடே மெல்லினக் காதலையிம், வல்லினக் காதலையும், இடையினக் காட்சிகளையும் நேர்த்தியாய் கொடுத்து தமிழ் போல் அழகாக்கியிருக்கிறார்.


இனி கதைக்கு வருவோம். சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது, திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது. இந்த இரண்டும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு பயணிக்கும் ஜெய், அஞ்சலி, சர்வானந்த். சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணிக்கும் அனன்யா. இவர்கள் யார்? இவர்களுக்குள் என்ன தொடர்பு? இந்த விபத்தால் இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தும் தலைகீழ் மாற்றங்கள் என்ன? என்பதுதான் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் திரைக்கதை.

திருச்சியில் வாழும் அஞ்சலி. தைரியசாலியான பெண். ஜெய்யை விட 4 மாதம் முந்திப் பிறந்தவர். அவரை காதலிக்கும் அப்பாவி பயந்தாங்கொள்ளியாய் ஜெய். அருகருகே வசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆறுமாதகாலமாய் அஞ்சலியை காதலிக்கும் ஜெய், அவரிடம் காதலை தெரிவிக்க முயல்கிறார். திடீரென்று ஜெய்யின் வீட்டிற்குள் நுழையும் அஞ்சலியைப் பார்த்து, “யார் நீ என்று கேட்பதும்” அதற்கு அவர் “ஆங்.. தெனம் மொட்டைமாடியில நின்னு கையாட்டும் போது தெரியலை இப்ப யார்னு கேட்குற” எனும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.

சற்று சுதாரித்துக் கொள்ளும் ஜெய் “அவங்களுக்கு நீட்டு தலைமுடியிருக்கும்” என்றதும் பின்பக்கம் திரும்பக்க்காட்டி “சாயங்காலம் அங்க வா.. இங்கவா…’’ ன்னு அலைய வைத்து அவரது காதலை சோதனை செய்யும் அஞ்சலி, அலைய வைத்ததற்கான காரணத்தை சொல்லுவது பளிச்.

ஜெய் இப்படத்தில் அமைதியான அப்பாவியான கேரக்டரில் வந்திருக்கிறார். அஞ்சலிக்கேற்ற பொருத்தமான ஜோடி என்பதை நிரூபித்திருக்கிறார். இவர் அஞ்சலி சொல்லும் சொல்லுக்கெல்லாம் தலையாட்டும் போது, நிறைய பெண்கள், தனக்கு இப்படி ஒரு காதல்தான் அமைய வேண்டும் என்று விரும்பினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

அஞ்சலி, இவரது அனாசயமான நடிப்பில் அனைவரையும் சபாஷ் போட வைக்கிறார். பாரதி கண்ட புதுமைப் பெண் போல இவரது பாத்திரத்தை அமைத்ததற்கு இயக்குனரை பாராட்டலாம். ஜெய்யை காதலிக்க ஆரம்பித்த பிறகும் கூட அவரது கிண்டல். நையாண்டி இழைந்து ஓடுவது அட போட வைக்கிறது.

ஒரு காட்சியில் அஞ்சலியும் ஜெய்யும் காபி அருந்திக் கொண்டிருக்க, பில் வருகிறது. பில்லை பார்த்த ஜெய் தன்னை மறந்து

ஜெய் – “என்னது ஒரு காபி 80 ரூபாயா? பீரே 80 ரூபாதான்’’

அஞ்சலி – ‘அப்போ நீ பீர் அடிப்பியா..?’

ஜெய் – “சத்தியமா இல்லீங்க…’’

அஞ்சலி – ‘நான் மட்டும் ஆம்பளையா இருந்திருந்தா, உலகத்துல இருக்க எல்லா சரக்கையும் டேஸ்ட் பார்த்திருப்பேன்..?’ என்று கலாய்க்கும் போது தியேட்டரே கலகலக்கிறது. இது போன்ற ஏகப்பட இடத்தில் பட்டாசு கிளப்பியிருக்கிறார் அஞ்சலி.
இது வல்லினக் காதல் என்றால், சர்வானந்த், அனன்யாவினுடையது மெல்லினக் காதல்.

சர்வானந்த் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். திருச்சியிலிருந்து சென்னையில் நடைபெறும் இண்டர்வியூவிற்காக அனன்யா வர, அவருக்கு உதவி செய்கிறார் சர்வானந்த். சிட்டியினுள் இவர்களிருவரும் சேர்ந்து பயணிக்கும் போது இவர்களுக்குள் காதல் அரும்புவதை அழகான கவிதை போல் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இருவரும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். இவர்களது வசனங்களும் நச் ரகம். பேருந்து பயணத்தின் போது சக பயணிகளாய் பயணிக்கும் வெளிநாட்டில் 5 வருடங்களாக பணிபுரிந்து விட்டும் வரும் நபர், புதுப் பொண்டாண்டியை பிரிய மனமில்லாத கணவன் என அவர்களும் நம் மனதில் அழகாய் அமர்ந்து கொள்கிறார்கள். அறிமுக இசையமைப்பாளரின் இசையமைப்பில் கோவிந்தா… கோவிந்தா பாடல் கலக்கல். பிண்ணனி காட்சிகளில் இவரது இசை படத்திற்கு பக்க பலமல்ல்ல பக்கா பலமாக இருக்கிறது. எங்கேயும் எப்போதும் மறக்காத இசைய் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உழைப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை. சென்னை நகரை காண்பிப்பது முதற் கொண்டு, இரு பேருந்திற்குள் நடக்கும் விஷயங்களை நம் அருகே இருந்து நடப்பது போல் காண்பித்திருப்பதை விட, அந்த பேருந்தில் நாமும் ஒரு பயணியாய் பயணிக்க வைத்திருக்கும் அவரது ஒளிப்பதிவிற்கு தைரியமாய் ஒரு சபாஷ் போடலாம். விபத்து காட்சியில் நம்மை விம்ம வைத்து விடுகிறார்.

இயக்குனரின் எண்ண ஓட்டங்களை, கேமரா கண்ணில் பதித்த வேல்ராஜின் உழைப்பை, தனது நேர்த்தியான படத் தொகுப்பால் நம்மை அசர வைத்து விடுகிறார் கிஷோர்.

ஏ.ஆர். முருகதாஸ் உதவி இயக்குனராக இருந்த சரவணன், குருவிற்கு ஏற்ற சிஷ்யன் என்பதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். பிளாஷ்பேக்கிற்குள் பிளாஷ்பேக் என்றாலும் அதை தனது திறமையான திரைக்கதையால் நேர்த்தியாக கதை சொல்லி இருக்கிறார். இத்தனை சம்பவங்களையும் தன் அழகான வசனத்தால் கோர்த்து மாலையாக்கி தந்திருக்கிறார். இவரை நம்பி படம் எடுத்த தயாரிப்பளார் ஏ.ஆர்.முருகதாஸிற்கு எங்கேயும் எப்போதும் நன்றி சொல்லலாம்.

மொத்ததில் எங்கேயும் எப்போதும்… ரசிகர்களின் மனதில் எப்போதும் இடம்பிடிக்கும்.

கருத்துகள்